2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

கூட்டு சேர்வதால் இருப்பதும் இல்லாமல் போய் விடுமா?

Janu   / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு சேர்வதால் இருப்பதும் இல்லாமல் போய் விடுமா?

மக்களால் நிராகரிக்கப்பட்டு ஆட்சியிழந்த கடந்த கால ஆட்சியாளர்கள் பலரும் மீண்டும் ஒன்றுகூடி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக அறிந்து கொள்ள முடிகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பிலான செய்திகள் வெளியாகியிருந்தன.

தாம் ஆட்சி செய்த காலப்பகுதியில் மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவமளித்து, தமது நலன்களை புறந்தள்ளி செயலாற்றியிருந்தால் அவர்களுக்கு தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்கியிருப்பார்கள். 2021, 2022 ஆம் ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்த காலப்பகுதியிலும் ஆட்சியிலிருந்தவர்கள் மக்களுக்கு ஏற்படுத்தியிருந்த பல அசௌகரியங்களை இன்னமும் மறந்திருக்கமாட்டார்கள்.

அத்தியாவசிய தேவைகளுக்கும் பொருட்களுக்கும் கூட வரிசைகளில் காத்திருப்பதும், அளவுக்கதிகமான தொகைகளை செலவிடுவதும் என பல கொடுமைகளை வாழ்நாளில் அனுபவித்திருந்தனர். அதன் பிரதிபலனை கடந்த தேர்தல்களில் அந்த ஆட்சியாளர்களுக்கு உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். 2015ஆம் ஆண்டிலும் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆட்சியிலிருந்த நான்கு வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் மக்களால் உணரக்கூடிய நிவாரணங்கள் மேற்கொள்ளப்படவில்லை. வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக ஒன்றுக்கு இரண்டு பிரதமர்கள் ஆட்சி செய்த நிலையும் ஏற்பட்டிருந்தது. அதன் தாக்கத்தையே நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக திகழ்ந்த ஐக்கிய தேசிய கட்சி தற்போதும் அனுபவித்த வண்ணமுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு முதல் நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் பழைய பாணியில் எதிரணிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களுக்கான திட்டங்களை மேற்கொள்ளவிடாமல், தம்மீது கவனத்தை திசை திருப்பி அதனூடாக மீண்டும் மக்கள் மத்தியில் சென்றுவிடலாம் என்ற ஒரு வியூகம் உள்ளது போலத் தோன்றுகிறது.

அதற்காகவே கடந்த தேர்தல்களில் ராஜபக்சர்களை முற்றாக நிராகரித்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனத்தினூடாக பாராளுமன்றம் வந்துள்ள நாமல் ராஜபக்ச கிராமம் கிராமமாக சென்று மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

நாட்டின் நெருக்கடி நிலைக்கு காரணமான கடந்த கால ஆட்சியாளர்களில் ராஜபக்சர்களும் முக்கிய இடம்பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகங்களில்லை, 2005 ஆம் ஆண்டு முதல் அவர்களின் ஆட்சி சுமார் 15 ஆண்டுகள் வரை நாட்டில் தொடர்ந்துள்ளது. அவர்களின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தூரநோக்கிலான சிந்தனையற்ற, சில திட்டமிடப்படாத கடன் பெறுகைகள் மற்றும் முதலீடுகளின் காரணமாக நாடு கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்தது என்றால் பிழையாகாது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றிலும் ராஜபக்சர்கள் அடங்கிய அவரின் சகாக்கள் நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமானவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறிருக்க, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்றுகூடுது, இருப்பதையும் இழந்துவிடச் செய்யும் ஒரு செயற்பாடாக அமையும் என்றே எண்ணத்தோன்றுகின்றது

07.02.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .