2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஓரணியில் திரளவேண்டும்

Editorial   / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இழுபறிக்குள் சிக்கித் தவிக்கும் பெருந்தோட்டத்துறை மக்கள்

அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறைகளில் முதன்மையிலிருந்த பெருந்தோட்டத்துறை தற்போது என்ன நிலையிலிருக்கிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். தோட்டத்துறை மட்டுமன்றி, அம்மக்களும் சொலொணத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

சம்பள உயர்வுக்காக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, முதலாளிமார் சம்மேளனத்துக்கும், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் இம்முறை கைச்சாத்திடப்படாமல், அரசாங்கத்தின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்று, நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கவேண்டுமென்ற வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது.

எனினும், தங்களுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாதென சில நிர்வாகங்கள் எடுத்த எடுப்பிலேயே கையை விரித்துவிட்டன. இன்னும் சில நிர்வாகங்கள் கூட்டிக் கழித்து, 1,000 ரூபாயை இறுதி செய்தன. எனினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு கடுமையான கெடுபிடிகள் மற்றும் நிபந்தனைகளை விதித்திருக்கும் இன்னும் சில நிர்வாகங்கள், அத்தொகையை கொடுக்காது இழுத்தடித்துக்கொண்டே வருகின்றன.

அந்நிய செலாவணி கையிருப்பு இன்மையில் அரசாங்கம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. கொரோனாவின் அலைகளின் போது, முழுநாடும் முடக்கப்பட்டிருந்த போதுகூட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். இதனூடாக ஓரளவுக்கேனும் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைத்துக்கொண்டிருந்தது என்பதை மறுதலிப்பதற்கில்லை.

இந்நிலையில், கூட்டொப்பந்தத்துக்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதிலென்ன கூத்தென்று பார்த்தால், அந்த ஒப்பந்தத்தில் பிரதான பங்காளர்களில் ஒருவராக இருக்கும் இலங்கைக் தொழிலாளர் காங்கிரஸே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும்” செயற்பாடுகளுக்கு ஒப்பானதாகும்.

இதற்கிடையே, நாளாந்தம் 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்காத தோட்ட நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, ஆராய்வதற்கு விசேட குழுவொன்றையும் நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆராய்வதற்காக குழுக்கள் நியமிக்கப்படுவதும் அக்குழுக்களின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக மற்றுமொரு குழு நியமிக்கப்படுவதும், விசேட நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப்படல் என்பதெல்லாம் ஒன்றும் புதிதல்ல. இறுதியில் தங்களுக்கு சாதகமில்லாத எல்லாமே கிடப்பில் போடப்பட்டுவிடும் என்பது மட்டுமே உண்மையாகும்.

சந்தர்ப்பதற்கு ஏற்றவகையில் அறிவிப்புகளை விடுத்து, மக்களின் துயரங்களில் குளிர்காயாமல், அதிகாரத்தில் இருப்பவர்களும் அவர்களின் சகபாடிகளும் அதிரடியான தீர்மானங்களை எடுத்து, உழைக்கும் மக்களை காப்பாற்றவேண்டும்.

யூரியா உரத்துக்கு தடையேற்படுத்தப்பட்டமையால், தேயிலைத் தொழில்துறையில் இன்னுமின்னும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், விளைச்சல் குறைவடைந்துள்ளது. தரமான தேயிலைத் தூளை ஏற்றுமதி செய்யாவிடின், சர்வதேச சந்தைகளில் இலங்கைத் தேயிலைத் தூளுக்கான கேள்வி குறைந்துவிட்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

அத்துடன், நவீன வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தாதுவிடின், போட்டிபோடுவது பெரும் சிரமமாகும் என்பதை ஞாபகத்தில் கொண்டு, சிக்கித்தவிக்கும் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்த, ஓரணியில் திரளவேண்டுமென வலியுறுத்துகின்றோம். (21.12.2021)

 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X