Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஜூன் 02 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர், சிறந்த பிக்குவாகவும் நேர்மையும் கொள்கைப்பற்றும் மிக்க அரசியல்வாதியாகவும் சுயநலமற்ற, சமூகச் செயற்பாட்டாளராகவும், புத்தரின் போதனைகளை மனச்சாட்சிக்கு விரோதமின்றிக் கடைப்பிடித்த முன்னுதாரண புருஷராகவும் வாழ்ந்து காட்டினார். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டடோர் போன்றோரின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்த இவரது முன்மாதிரியான வாழ்வு நினைவுகூரப்படவேண்டியது ஆகும்.
பத்தேகம, கொதட்டுவ ஸ்ரீபாதகொடெல்ல விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய சமித தேரர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் (30) அதிகாலை கொவிட் நியூமோனியா காரணமாக, தனது 69ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
தேரர் தனது மாணவப் பராயம் முதலே, மார்க்சிச கொள்கை சார்ந்தே அதிக விருப்பம் கொண்டிருந்தார். இதனால், இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தூண்டப்பட்டார்.
‘பன்முகத்தன்மையில் ஒற்றுமையே இலங்கை தேசத்தின் இருப்பு’ என்பது, தேரரின் தூரநோக்காகவும், அரசியல் முன்னுரிமையாகவும் இருந்தது.
லங்கா சம சமாஜக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து 2001ஆம் ஆண்டு பாராளுமன்றுக்குத் தெரிவான இவர், இலங்கை பாராளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பௌத்த தேரர் என்ற பெருமையும் கொண்டுள்ளார்.
இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களை, சிறுபான்மையினர் என அழைக்கக் கூடாது; அவ்வாறு அழைப்தே ஓர் இனஒடுக்கல் செயற்பாடு என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தேரர், தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வந்ததுடன், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில், தென்னிலங்கையில் இருந்து, வடக்குக்குச் சென்ற சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சமாதானத் தூதுக்குழுவில், பத்தேகம சமித தேரர் முக்கிய நபராக அங்கம் வகித்திருந்தார். தொடர்ந்து, விடுதலைப் புலிகளுடனான தொடர்பை, அந்நியோன்னியமாகவும் திறந்தமனதுடனும் பேணிவந்திருந்தார். அத்துடன், தென் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம், முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்திருந்தமையும் நினைவுகூரத்தக்கது.
சர்வதேச அரசியலில் தீவிர ஆர்வ விழிப்பாளரான இருந்த தேரர், சர்வதேச சமத்துவ நீதிக்காகத் தீவிரமாக அக்கறை காட்டியிருந்தார். அத்துடன், இலங்கை-பலஸ்தீன ஒத்துழைப்புக்கான ‘தக்ஷின லங்கா அறக்கட்டளை’யின் தலைவராகவும் இறக்கும் வரை பணியாற்றினார். பலஸ்தீன விடுதலைக்காக சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் முக்கிய பெளத்த தலைவராகத் திகழ்கின்றார் என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்த இவரது பார்வையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இனவாதத்துக்கு இனவாதத்தால் பதில்சொல்ல முடியாது, பொறுமை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் என்பவற்றின் மூலமே பதிலளிக்க வேண்டும் என்ற தேரரின் முயற்சிகள், அர்ப்பணிப்புகள் ஒருபோதும் வீண்போய்விடக்கூடாது. ஏனையோருக்கும் அவருடைய வாழ்க்கை முன்மாதிரியாக அமையவேண்டும் என்பதே எமது பலத்த எதிர்பார்ப்பாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago