2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ஏற்பாடு குளறுபடிகளும் கலாசாரத்துக்கு விழுந்த பேரடியும்

Editorial   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி குழப்ப நிலையில் நிறைவடைந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இதற்கு பல்வேறான காரணங்கள் கூறப்பட்டாலும் ரசிகர்கள் நடந்துகொண்ட விதம், முகஞ்சுளிக்கச் செய்துவிட்டது.

தென்னிந்தியப் பாடகர்கள், நடிகர்களின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிட்ட சதவீத பங்களிப்பைச் செலுத்துகின்றது. இந்தியத் தமிழ், இந்தி திரைப்படங்களுடன் இலங்கையில் வாழும், தமிழ், சிங்கள மக்களுக்கும் ஒரு பிணைப்பு உள்ளது.

தென்னிந்தியாவில் இருந்து வெளியாகும் படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்துவிட்டே, யாழ்ப்பாணத்தில் பெரும் அட்டகாசத்தில் வாள் வெட்டு, ஆவா குழுவினர், ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறான நிலையில், ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழ். முற்றவெளியில் நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி, தளபாடங்கள், பாரிய நீர்த்தாங்கிகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.

இவை, இரசிகர்களின் கீழ்த்தரமான இரசனையைப் படம் பிடித்துள்ளது. ஓர் இசைக்கு, இன,மொழி உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடுகளும் இல்லை. ரசிக்க தெரிந்தவனுக்கு எந்த மொழியில் இசைக்கப்பட்டாலும் அது இசையே. ஆனால், சிங்களத்தில் பேசப்பட்டதால்தான், ரசிகர்கள் கோபமடைந்து, ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

எனினும், கட்டணம் செலுத்தாமல், வெளியே நின்று கொண்டிருந்தவர்களை, உள்ளே செல்ல அனுமதியளித்ததால், திமுதிமுவென நுழைந்தவர்கள், கட்டணம் செலுத்தி அமர்ந்திருந்தவர்களின் இடங்களுக்குச் சென்று, நாற்காலியில் அமர்ந்துகொண்டனர் என்றும், கட்டணங்களைச் செலுத்தியோர் நின்று கொண்டிருந்தனர்.

ஆகையால் குழப்பகரமான நிலை ஏற்பட்டது என்றும் அறியமுடிகின்றது. இந்தவிடயத்தில், ஏற்பாட்டுக் குழுவினரின் அனுபவமின்மை அம்பலமாகியுள்ளது. கட்டணங்களை வசூழித்து நிகழ்ச்சியை நடத்தவேண்டுமாயின், கட்டாயமாக உள்ளக அரங்கு இருக்கவேண்டும்.

இல்லையே முறையான பாதுகாப்புடன் அரங்கு அமைக்கப்படவேண்டும். இவற்றுக்கெல்லாம் அப்பால், யாழ். முற்றவெளியில் நடந்த ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி, இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு விற்பனைச் செய்யப்பட்டு விட்டதாகும், இந்த இசைநிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்வதற்கு, பார்வையாளர்களின் மத்தியில், மேடையமைக்கப்பட்டு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ரசிகர்கள் கோபமடைந்து விட்டனர் என்றும் கூறப்படுகின்றது.

எனினும், அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினர், சிங்களத்தில் பேசியதால், தங்களுக்கு விளக்கவில்லையென, இரசிகர்கள் குழப்பமடைந்து விட்டனர் என்றொரு தகவல் வெளிவந்துள்ளது. மற்றொரு மொழியை விளங்கிக்கொள்வதில் சிரமமில்லை.

எனினும், விளங்கிக்கொள்ளவே மாட்டோமென விதண்டாவாதமாகச் செயற்படுவோரை என்ன செய்வது. தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அதனை எல்லா சந்தர்ப்பங்களிலும் கையில் எடுப்பதுதான் கூடாத செயல். அதுமட்டுமன்றி, ஏற்பாட்டுக் குழுவினரும். இன்னும் பல விடயங்களைச் செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால், கலாசாரத்துக்கு அடி விழுந்திருக்காது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .