2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்

Editorial   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்ணயர்ந்து கண் விழிக்கும் முன்னர் பலரும் தங்களுடைய கைவரிசையை மிகக் கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு, அடுத்த கைவரிசையை காட்ட சென்று விடுகின்றனர். இழந்தவர்கள், அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் தங்களுடைய பெறுமதியான பொருட்களையும், ஆவணங்களையும், பணத்தையும் கவனமாக வைத்துக்கொள்ளுமாறு பொலிஸாரினால் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் அவ்வப்போது அறிவுறுத்துவர்.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறு வர்த்தகர்களும் பயணிகளை அறிவுறுத்துவர். எனினும், ஒவ்வொருநாளும் ஏதோவொன்றை பயணிகள் இழந்துவிடுகின்றனர். கண்களில்  விளக்கெண்ணெயை ஊற்றி விழித்திருந்தாலும், கண்களுக்குள் விரலைவிட்டு ஆட்டிவிடுகின்றனர்.

இதற்கிடையே மிக நாசுக்காக பேசி பல இட்சம் ரூபாயை பலரும் கறந்துவிடுகின்றனர். வெளிநாட்டு மோகத்தில் மூழ்கியிருப்போர் பெருந்தொகையை இழந்துவிடுகின்றனர். இல்லையேல் இறுதியில் சிக்கிக்கொள்கின்றனர். அவ்வாறான சம்பவங்கள் ஏராளம் நாட்டில் நடைபெறுகின்றன.

பெண் பார்க்கச் சென்றவரிடம் வெளிநாட்டு மோகத்தை காண்பித்து அவரிடமிருந்து 18 இலட்சம் ரூபாயை கறந்த சம்பவம் வடக்கில் இடம்பெற்றுள்ளது. ஏமாற்று கைவரிசையை காண்பித்த பெண்ணொருவர் சிக்கியுள்ளார். அவர், இவ்வாறு பலரை ஏமாற்றியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு விமானங்களில் ஊடாக செல்லமுயன்று சிக்கிக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி, கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் சென்றாலும், இந்தியா அவர்களை ஏற்றுக்கொண்டு, அகதி முகாம்களில் தங்கவைத்து கவனித்துக் கொள்கின்றது. அவுஸ்திரேலியா, பலரையும் திருப்பியனுப்பியுள்ளது.

சட்டவிரோதமான படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டாம். அவ்வாறு வந்தால் ஒருபோதும் புகலிடம் கிடைக்காது என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற எட்டு சம்பவங்களில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.  இதேவேளை, கடந்த வருடம் 1,532 பேர் சிக்கியுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் படகுகளின் ஊடாக இந்தியாவுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தங்களிடம் இருக்கும் பணத்தை இடைத்தரகர்களிடம் வழங்கியே இவ்வாறான ஆபத்தான பயணத்தை அவர்கள் மேற்கொள்கின்றனர். மனித கடத்தல்களில் ஈடுபடும் தரகர்கள் ரொக்கமாக கறந்துவிட்டு, மணல் திட்டுகளில் அநாதைகளாக விட்டுவிடுகின்றனர்.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் போது அவதானமாக இருக்கவேண்டும். வெளிநாட்டு ஆசைகளை ஊட்டுவோரிடம் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .