2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

ஊரடங்குக்குள் இருக்கும் சட்ட முடிச்சுகள்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘தனிமைப்படுத்தல்’, ‘பொலிஸ்’ ஊரடங்குக்குள் இருக்கும் சட்ட முடிச்சுகள்

ஊரே அடங்கியிருந்தால் யாருக்குதான் சந்தோஷம் இருக்காது. அதுவொரு காலம்தான். ஆனால், ஊரடங்குச் சட்டம் அமுலென அறிவித்தாலும் மக்களின் நடமாட்டத்தையும் வாகனங்கள் பயணிப்பதையும் அவதானிக்க முடிகிறது. இதனால், ‘ஊரடங்கு’ தொடர்பில், மக்கள் விளக்கமின்றி விழிபிதுங்கி நிற்கின்றனர்.

கொரோனா வைரஸூக்குப் பின்னர், பிறப்பிக்கப்பட்ட ‘தனிமைப்படுத்தல் ஊரடங்கு’ கொஞ்சம், கொஞ்சமாக விரிவடைந்தே செல்கிறது. ஏற்கெனவே, பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் தளர்வின்றித் நீடிக்கப்படுகிறது. பிறப்பித்த ஊரடங்கு நீடிப்பதால், முழுநாடும் முடங்குவதற்கு வாய்பில்லையென்பது ஓரளவுக்கு உறுதியாகிறது.

‘தனிமைப்படுத்தல் ஊரடங்கு’, ‘பொலிஸ் ஊரடங்கு’ ஆகிய இரண்டு ஊரடங்குகள் தொடர்பிலும் சாதாரண மக்களிடத்தில் தெளிவில்லை. கொரோனா வைரஸ், இலங்கைக்குள் வியாபித்த வேளை, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழே, ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படியொன்றும் ஏன் செய்யப்படவில்லையெனச் சிந்தித்தோமா? இல்லை. நாட்டில் அவசரகால நிலைமையொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கமுடியும்.

முழுநாட்டிலும், பிரதேசமொன்றில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதியின் இயலுமையின் பிரகாரம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, ஊரடங்குச் சட்டத்துக்கான கட்டளையைப் பிறப்பிக்கமுடியும்.

அந்தச் சட்டத்தின் பிரகாரம், ‘பொது’ இடங்களென அர்த்தநிரூபணம் செய்யப்படும் இடங்களுக்குச் செல்லமுடியாது. அந்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட 10 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதியையும் பெறவேண்டும்.

கொரோனா வைரஸ் வியாபித்ததன்பின்னர் அவசரகால நிலைமையொன்று பிறப்பிக்கப்படவில்லை என்பதால், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளைகளைப் பிறப்பிக்கும் இயலுமை இருக்கவில்லை. ஆகையால் ‘பொலிஸ் ஊரடங்கு’ அமுல்படுத்த இயலாது.

ஆனால், ஏதாவது தொற்று நோயொன்று தனிமைப்படுத்தப்பட்ட நோயாக அடையாளம் காணப்படுமிடத்து, 1897ஆம் ஆண்டு தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களின் தனிமைப்படுத்தல், தடுப்பு கட்டளையின் கீழான ஒழுங்குவிதிகளை, சுகாதார அமைச்சரால் செயற்படுத்தலாம். அதை அமுல்படுத்தும் அதிகாரம் 'தகுதிவாய்ந்த அதிகாரிக்கு' உண்டு.

அவசரகாலச் சட்டத்தின் கீழான ஊரடங்கை மீறுவோரை, குற்றவியல் குற்றவாளியாக இனங்காணலாம். கைதுசெய்ய பிடியாணை தேவையில்லை. குற்றவாளிக்கு ஒருமாதத்துக்கும் குறையாத கடூழிய சிறைத்தண்டனை, அபராதத்தை விதிக்கலாம். இது பிணை பெற்றுக்கொள்ளக்கூடிய குற்றமாகும்.

எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபரொருவருக்கு 2 ஆயிரத்துக்கும் குறையாத, 10ஆயிரம் ரூபாய்க்கும் அதிகரிக்காத அபராதத்துடன் ஆறுமாதங்கள் குறையாத சிறைத்தண்டனையை விதிக்கமுடியும். இல்லையேல் இரண்டையும் பிறப்பிக்கலாம்.

தண்டனைகளை ஒப்பிட்டுபார்த்து தவ​றிழைப்பதற்கு யாரும் முயற்சிக்கக்கூடாது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், சட்டத்தைக் கடைப்பிடித்து, நம்மையும் அக்கம்பக்கத்தினரையும் பாதுகாக்க உறுதிபூண்டுக் கொள்வோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X