Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2021 மார்ச் 29 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்மூடிக் கண்திறப்பதற்குள் உருண்டோடிய ஓராண்டு மரணம்
சில விடயங்களை ஞாபகத்தில் வைத்திருக்கத் தேவையில்லை. இன்னும் சிலவற்றை கட்டாயமாக நினைவில் கொள்ளவே வேண்டும். கொவிட்-19 நோய் முழுவீச்சில் பரவத்தொடங்கியதை அடுத்து, வீட்டில் பலரும் முடங்கிவிட்டனர். ஞாபகமெல்லாம் கொவிட்-19 உடன் நின்றுவிட்டது.
இலங்கையில் முதலாவது முடக்கத்தின் போது, பல மாதங்களாக முழுநாடும் முடக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுவிக்கப்பட்டது. இரண்டாவது அலையின்போது, கொவிட்-19 நோயாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்கள் மட்டுமே முடக்கப்பட்டன. சில பகுதிகளில், ஓர் ஒழுங்கையோ, வீதியோ மட்டும் முடக்கப்பட்டது.
சுகாதார வழிகாட்டல்களில் பலவற்றை மக்கள் முறையாகக் கடைப்பிடித்தமையால், இரண்டாவது அலையில் சன நெரிசல்மிக்க ஒரு சில பிரதேசங்களைத் தவிர, ஏனைய இடங்களில் இறுக்கமான நிலைமையொன்று இதுவரையிலும் ஏற்படவில்லை.
வடக்கு, கிழக்கு, மலையகத்தில் அவ்வப்போது ஒருசில பிரதேசங்கள் மட்டுமே முடக்கப்பட்டு, திறக்கப்பட்டன. இந்நிலையில், மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்படாத வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும், இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படுகின்றன. இதையும் கொரோனாவுக்கு எதிரான வெற்றியின் ஓர் அங்கமாகவே பார்க்கவேண்டும்.
ஆனால், யாழ். மாவட்டத்துக்குள் புகுந்துகொண்ட கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலரும் பாதிக்கப்பட்டு, பிரதேசங்கள் சிலவும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்-சிங்கள புத்தாண்டும் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
புத்தாண்டு தினத்தன்று, கொவிட்-19 தொற்றிக்கொள்வது அரிதாக இருப்பினும், அதற்கு முன்னரான காலப்பகுதியிலும், புத்தாண்டுக்குப் பின்னரும் மிகமிகக் கவனமாக இருக்கவேண்டியது ஒவ்வொருவருடைய தார்மீகப் பொறுப்பாகும். இல்லையேல், புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.
கடந்தவருடமும் புத்தாண்டு கொண்டாடப்படவில்லை. இம்முறையும் கொண்டாட முடியாமல் செய்துவிடாமல், சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால், மெதுவாகவேனும் தற்போது சுழன்றுகொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம் அவ்வாறே சுழலும்.
ஆனால், மக்களிடத்தில் ஓரளவுக்கு அக்கறையீனம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அது, ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதை மீண்டும் வலிறுத்துகின்றோம். அதேபோல, கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசிகளை ஏற்றுதலும் மும்முரமாக இடம்பெறுகின்றது. ‘நாங்கள்தான் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுவிட்டோமே’ என அசட்டையாகவும் இருந்துவிடக்கூடாது.
இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னர், 2020.03.28 அன்றை தினமே முதலாவது மரணம் பதிவானது என்பதையும் நினைவுறுத்துகின்றோம். இந்த ஓராண்டுக்குள் கொவிட்-19 நோயால் 558 பேர் மரணமடைந்துவிட்டனர்.
வயது வித்தியாசம் பார்க்காது மரணங்கள் சம்பவித்துள்ளன. எனவே, சுகாதார வழிகாட்டல்களின் நிமித்தம், மக்களிடத்தில் அக்கறையீனமும் அதிசிரத்தையும் ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல; முழுநாடும் வழமைக்குத் திரும்பியிருப்பதால், இருப்பதை பாதுகாத்துக்கொள்வதே சிறந்தது என்பதை நாமும் வலியுறுத்துகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
24 Nov 2024
24 Nov 2024
24 Nov 2024