2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

உரிமைக்குரல்கள் ஒலிக்காது மௌனிக்கும் உழைப்பாளர் தினம்

Mayu   / 2024 மே 01 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடம் முழுதும், ‘மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்’ தொழிலாளர்கள், தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உரத்துக் குரல்கொடுக்கும் தினமான உழைப்பாளர் தினம் (மே 1),  பல கோரிக்கைகளுடன் இன்று(01) உலகளவில் கொண்டாடப்படுகின்றது.

சிக்காகோ தியாகிகளின் தியாக தினமான ‘மே தினம்’ உழைப்பாளிகளின் ஆற்றலின் தேவையை உணர்த்தவும் போற்றவும் வேண்டிய தொழிலாளர்களின் எழுச்சிமிக்க மே 1ஆம் நாள், உண்மையான நோக்கத்திலிருந்து கடந்த காலங்களில் தலைகுப்புற விழுந்துவிட்டது. 
மேதினக் கொண்டாட்டங்கள் பலமுறை தவிர்க்கப்பட்டன.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் இது முதற்றடவையல்ல. 1965ஆம் ஆண்டு  அரசாங்கம் மேதினத்தைத் தடை செய்தது. 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று புறக்கோட்டையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலை அடுத்து, மே தினக் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டன.

2018 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி, வெசாக் போயா தினம் என்பதால், மகாநாயக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆறு நாள்களுக்குப் பின்னரே, மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொழிலாளர்களின் தினத்தில் இவ்வாறு பல, முன், பின் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக, மே 1 மௌனித்தது.

நாடு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் மிக இக்கட்டான நெருக்கடிமிக்க சூழலில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பது, அவ்வளவுக்கு உசிதமானது அல்ல. எனினும், அவ்வப்போது அறிவிக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டங்கள், ஓரிரு மணிநேரத்துக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொந்தளித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் விட்டுவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, சாதகமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இலங்கையை பொறுத்தவரையில், தொழிலாளர்களின் பாடு, பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் அரசாங்கத்துக்கு, அழுத்தம் கொடுப்பதென்பது இயலாத காரியமாகும்.  அதைச் சாதகமாகப் பயன்படுத்தி, தொழிலாளர்களைத் தொடர்ந்தும் வஞ்சிக்காது, அவர்களையும் ஏறெடுத்துப் பார்க்கவேண்டும் என்பதே, எங்களது வலியுறுத்தலாகும்.​

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளாகிவிட்டன. இல்லையேல், அரசியல் கட்சிகளுடன் சங்கமித்துவிட்டன. இதனால், தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள் அரசியல் கோரிக்கைகளாகிவிட்டன. இது, அரசாங்கத்துக்கு பாரியளவில் அழுத்தம் கொடுப்பதாய் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், அரசியல் சாயம் பூசப்பட்டுவிடுமாயின், உரிமை குரல்கள் மௌனித்துவிடும்.

நமது நாட்டை பொறுத்தவரையில், ஒருசில தொழிற்சங்கங்கள் மட்டுமே, அரசியல் கலப்படமில்லாது இருக்கின்றன. ஏனைய தொழிற்சங்களுக்கு பின்னால், அரசியல் இருக்கும். அவ்வாறான தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக பம்மாத்து காட்டிக்​கொண்டிருக்கும். இல்லையேல், உரிமை குரல்களை கொடுக்கும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களை காட்டிக்கொடுக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும். வென்றெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே எமது குரலாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X