2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

உசுப்பேத்துவோரின் பசப்பு வார்த்தைகளை இனியேனும் நம்பாதீர்

Editorial   / 2021 மார்ச் 07 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உசுப்பேத்துவோரின் பசப்பு வார்த்தைகளை இனியேனும் நம்பாதீர்

ஒரிரு விநாடிகள் சிந்திகாவிடின், அதன் விளைவாக வேதனைகள், சோதனைகளை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டி ஏற்பட்டுவிடும். சிந்திக்காததவர் மட்டுமன்றி, அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அயலவர்களும் அதன் தாக்கத்தை அனுபவித்தே ஆகவேண்டும்.

மஸ்கெலியா ஓல்டன் தோட்ட முகாமையாளர், பிரதி முகாமையாளர் ஆகிய இருவரின் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து, சாணத்தைக் கரைத்து ஊற்றி, அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்ட அத்தோட்டத்தைச் சேர்ந்த பெண்கள் எட்டுப் பேர் உட்பட 10 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 16 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் மூக்கில் முட்டாத வரையிலுமே, மற்றொருவர் கையை நீட்டமுடியுமெனப் பலரும் கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆக, தனது பிள்ளையென்றாலும் அதனை அடித்துத் துன்புறுத்துவதற்கு உரிமையில்லை. ஆனால், திரண்டு சென்ற மக்கள், இரண்டு நிர்வாகிகளையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

‘திரண்டு சென்று தாக்கியுள்ளனர்’ என்றால், நிர்வாகம், நிர்வாகிகள், அம்மக்களைத் தொடர்ச்சியாகச் சீண்டியிருந்திருக்கக் கூடும். இல்லையேல், அவ்வளவு ஆத்திரம், ஆவேசம் வந்திருக்காது. இன்றேல், “நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்” என்று, யாராவது உசுப்பேற்றிவிட்டு, அதில் குளிர்காய முயற்சித்து இருக்கலாம். சம்பவம் பூதாகரமாகி விட்டதால், உசுப்பேற்றியவர்கள் கண்டும் காணாதைப்போல இருக்கலாம்.

எப்படியாயினும், ஆத்திரத்தால் அடித்து நொறுக்கியவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோட்டத்தில் கடமையாற்றும் ஏனைய நிர்வாகிகள், விடுதிகளைப் பூட்டிவிட்டு சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

தொழிலாளர்களுக்கு வேலையில்லை; மாத இறுதியில் வழங்கப்படும் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை; இது, அத்தோட்டத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மென்மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும். மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் காண்பிக்கும் ஆர்வம் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தோட்டத்தில் சுமூகமான நிலைமையொன்று ஏற்படும் வரையிலும், தொழிலாளர்கள் பிற வேலைகளில் ஈடுபட்டால் மட்டும், குடும்பத்தைக் காப்பாற்றமுடியும். அதேபோல், “தொழிலாளர்கள் தாக்கிவிட்டனர்; எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை” எனக்கூறி, ஒற்றைக்காலில் நிற்காது, பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

ஒருவரை மற்றொருவர் அடிக்கிறார் என்றார், அந்த ஒருவர் தொடர்ச்சியாக சீண்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். அது நிர்வாகத்தில் இருக்கும் ஒருவருக்கு அழகல்ல! அடிதடியால்தான் பிரச்சினைகள் தீருமென்றால், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வே இல்லை.

அதேபோல, ஒருவர் கோபமாகவோ அவசரமாகவோ இருக்கும் போது, அவரிடம் நிதானம் என்பது இருக்காது; சரியாகவும் தீர்க்கமாகவும் யோசிக்க முடியாது. அப்போது முடிவும் எடுக்க கூடாது. அப்படியே முடிவு எடுக்கப்படுமாயின் அது தவறாகவே இருக்கும். இதையே ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .