Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜூலை 02 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தமிழ் அரசியலில் முதுசம் என பலராலும் நன்கறியப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஐயா, அமரத்துவம் அடைந்துவிட்டார். தமிழ் தேசியத்துக்காக வாழ்ந்து, தனது மூச்சு இருக்கும் வரையிலும் இறுதி வரையிலும் போராடிய பெருந்தலைவர் ஆவார்.
சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், பாராளுமன்றத்தில் விடுப்பை பெற்றுக்கொண்டு ஓய்வெடுத்தார். அக்காலக்கட்டத்திலும், தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில், வெளிநாட்டு தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தவறவில்லை.
சிறிதுகாலம் கடும் நோயுற்றிருந்த ஐயா, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (30) இரவு 11 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.
உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டங்களிலும் நன்கறியப்பட்ட தமிழ்த் தலைவரான சம்பந்தன் ஐயா, தனது ஆளுமையின் கீழ் வடக்கு,கிழக்கு தமிழர்களை மட்டுமன்றி, தனது தலைமைக்கு கீழிருந்த உறுப்பினர்கள், அங்கத்தவர்களையும் கட்டுக்கோப்புக்குள் வைத்திருந்த பெருந்தலைவர் என்றால் மிகையாகாது.
பாராளுமன்றத்தில் அரசியல் கொள்கை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஐயாவுக்கு இருந்த மரியாதை சொல்லில் அடங்காது. ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடும் மரியாதைக்கு உரியவராகவே மதிக்கப்பட்ட பெருந்தலைவர் ஆவார்.
பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும், குரல்கொடுக்கும் போதெல்லாம், தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கரிசணையில் கடுமையாக உழைத்தவர். தனது கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் உழைத்தவர்.
அதனால்தான் என்னவோ, ஐயா, சம்பந்தன் காலத்தில் அதாவது, அவர் உயிருடன் இருக்கையிலேயே அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்காவிடின், பெற்றுக்கொள்ளாவிடின் தீர்வு மிகக் கடினமானதாகவே இருக்குமென மூத்த சிங்களத் தலைவர்கள் சபையில் பேசியிருந்தமையை, இப்போதாவது ஞாபகத்தில் கொள்வது அவசியமாகும்.
அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியா, சர்வதேசத்துடன் அவர் கையாண்ட விதமும், அவருடைய பங்கும் அளப்பறியது. ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்னர், அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொண்ட அவர், பேச்சுவார்த்ததைகளின் ஊடாக அதுவும் அஹிம்சை வழியில் தீர்வை தேடினார். அதற்கு தானே முன்னின்று தலைமைத்தாங்கினார்.
1977 பாராளுமன்ற தேர்தலில், திருகோணமலை தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணயில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஐயா, அதே கூட்டணியின் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 1989 ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன்பின்னர், 2001,2004,2010,2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்களில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு வெற்றியீட்டினார். 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சம்பந்தன் ஐயாவின், எதிர்க்கட்சித் தலைவருக்கான வகிபாகம் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்ற தமிழ்த் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். அவ்வாறான பல்முக ஆளுமைகளை கொண்ட அரசியல் முதுசமான ஐயாவின் வெற்றிடம், நிரப்பப்படாத வெற்றிடமாகவே இருக்குமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதையும் நினைவுறுத்தி அவரது இழப்பால் துயருறும் அனைவருக்கும் தமிழ்மிரர் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago