2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

அரசாங்கத்தின் கன்னி பாதீடும்,மக்களின் கனவுகளும்

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனவு யாருக்குத்தான் வரவில்லை. சில கனவுகள் பலிக்கும் இன்னும் சில கனவுகள் இடையிலேயே கலைந்துவிடும். அதுபோலதான், மக்களின் வாழ்க்கையும் கனவிலேயே மிதக்கிறது. தேர்தல்கள் காலங்களில் பல்வேறான வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் தரப்பினர் ஆட்சிப்பீடம் ​ஏறியவுடன், திமுறுகின்றனர். இன்றேல், கோரிக்கைகளை அடியோடு மறந்துவிட்டு, ஆட்சியை தக்க வைக்கும் அரசியலமைப்பு திருத்தங்களையே மேற்கொண்டனர். இவை கடந்த கால கசப்பான உண்மையாகும்.

எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவ்வப்போது கருத்துரைக்கின்றதே தவிர, ஆக்கப்பூர்வமான எவ்விதமான செயற்பாடுகளிலும் இறங்கவில்லை. இது தொடர்பில் ​பொதுவெளியில் அவ்வப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கிடையே பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்திவாசிய பொருட்களின் தட்டுப்பாடு, “தூய்மையான இலங்கை” செயற்றிட்டத்தினால் சாதாரண மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் கடுமையான கேலி கிண்டல்கள் செய்யப்பட்டு வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன.
2024 செப்டெம்பர் 21ஆம் திகதியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றார். அவர், தனக்குள்ள ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி, பாராளுமன்றத்தைக் கலைத்தார், பொதுத் தேர்தல், 2024 நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெற்றது. அதில், மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்தி, 159 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டது.

கடந்த கால அரசாங்கங்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத போது, தங்களுக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள, எதிரணியில் இருந்து உறுப்பினர்களை விலைபேசி, அமைச்சுப் பதவிகள், பிரதி அமைச்சு பதவிகள் இன்றேல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கி, தங்களுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொண்டு கொண்டது. எனினும், 
தேசிய மக்கள் சக்தி, அந்த விடயத்தில் அமைதியாக காய் நகர்த்துகிறது, 
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், பாராளுமன்றத்தில் இன்று (17) திங்கட்கிழமை காலை 
10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

தேர்தல்கள் காலங்களில், சம்பள அதிகரிப்பு, நிவாரணம், முதலீடுகளுக்கான வாய்ப்பு, ஓய்வூதிய கொடுப்பனவு, முதியோர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் விலை குறைப்பு உள்ளிட்டவை தொடர்பிலான வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி, அள்ளி வீசியமையால், 
மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் கனவு 
கண்டு கொண்டிருக்கின்றனர். 
வாக்குறுதிகளில் சிலவற்றை அரசாங்கம் அவ்வப்போது நிறைவேற்றியுள்ளது. அதன் பயனை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது உண்மையாகும். எனினும், வறுமை கோட்டிற்கு உட்பட்ட பல குடும்பங்கள், அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களில் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. ஆகையால், 
அவை தொடர்பிலும் அரசாங்கம் 
கவனம் செலுத்த வேண்டும். என்பதுடன், மக்களின் கனவுகளில் மண்ணை வாரி இறைத்து விடக்கூடாது என்பதே 
எமது அறிவுறுத்தலாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X