Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உன்னதமாக வளர்ந்திருக்கும் விஞ்ஞான உலகில், இறைவன் மீதான நம்பிக்கைகளும் இன்னும் உன்னதமாக இருக்கத்தான் செய்கின்றன. ‘நம்பிக்கை - அவநம்பிக்கை’, ‘விசுவாசம் - அவவிசுவாசம்’ என்ற விவாதம், இவ்விடத்துக்கு பொருத்தமானதாக அமையாது என்பதால், நம்பிக்கையும் விசுவாசமும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவகையில் இருக்கவேண்டுமென விட்டுவிடுகின்றோம்.
இந்த இறை நம்பிக்கை, உயிருக்கு உலை வைக்குமாயின், அதுதொடர்பில் பொதுவெளியில் அலசுவது உசிதமானதாகும். எனினும், அவரவர் நம்பிக்கைகள், விசுவாசத்தின் மீது சேறு பூசி, மனக்காயங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில், ஒருவரின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும், சுரண்டிப் பார்ப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. இறைவன் மீதான நம்பிக்கையும் விசுவாசமும் அவரவரின் அடிப்படை உரிமையாகும்.
சமயம் அல்லது ஆன்மிகத் தத்துவம் என்பன, கடவுள் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான வாழ்க்கைக் கோட்பாட்டு முறைமைகளாகும். கடவுள் மீதான நம்பிக்கை, அது தொடர்பிலான செயற்பாடுகள், சடங்குகள் என்பன மதம் சார்ந்தவை. பல்லினங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், சமயம் தொடர்பான சடங்குகள் வேறுபட்டிருக்கின்றன.
சடங்குகள் பல்வேறுபட்டவையாக இருந்தபோதிலும் அதன் நோக்கங்கள் மாறுபட்டவையாக இருக்கமுடியாது. சில சடங்குகள், சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நிகழ்த்தப்படுகின்றன. சில, சடங்குகள் மரபு ரீதியானவையாகவும் உணர்வுபூர்வமான திருப்திக்காகவும் நிகழ்த்தப்படுகின்றன. சமூகப் பிணைப்புகள், உறவுகளை வலுப்படுத்தல் என்பவற்றின் அடிப்படையில், மனிதன் தோன்றிய அன்றே, சடங்கும் தோற்றம் பெற்றுவிட்டது. ஏனெனில், சடங்கானது மனித மனத்தின் வெளிப்பாடாகும்.
கொரோனாவுக்குப் பின்னர், ஒவ்வொருவரும் ஏதொவொரு வகையில் செருமிக்கொண்டும், இருமிக்கொண்டும் இருப்பர்; தொண்டையில் சளி இருப்பதாகவே பலரும் உணர்வர்; சளியை வெளியில் எடுப்பதற்காக, பல்வேறான மூலிகைகளை அவித்து குடிப்பர். சிலருக்குச் சரியாகிவிடும்; இன்னும் சிலருக்கு வைத்தியரைப் பார்த்தால்த்தான் குணமாகும். சிறுவர்களாயின், கட்டாயமாக, வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
எனினும், தாங்கள் நம்பும் சமயத்தின் பிரகாரம் பிரார்த்தனை செய்தமையால், 10 வயதான சிறுவன், மரணமடைந்த சம்பவம், நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுவன் மரணித்த பின்னரும், அவன் உயிர்த்தெழுவான் என்ற நம்பிக்கையில், பிரார்த்தனை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சிறுவனின் தாய், தந்தை, பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘மதம் என்பது, இதயமற்ற உலகின் இதயம்; துன்பப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான போதை’ என கார்ள் மார்க்ஸ் தெரிவித்துள்ளார். நம்பிக்கை போதையாகிவிடக்கூடாது என்பதில், சகலரும் கவனமாகவே இருக்கவேண்டும். அதனூடாக, அநாவசியமான முறையில் உயிர்கள் இழக்கப்படுவதைத் தவிர்க்கமுடியும். அத்துடன், சட்டத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு, சின்னாபின்னமாவதையும் தவிர்க்கலாம். மதம், சடங்குகள், அவரவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவை என்றாலும் நோய், பிணிகள் சார்ந்து, விஞ்ஞான உலகையொட்டியும் பயணிப்போமாயின், அத்தியாவசியமான போதையால் உயிர்கள் இழக்கப்படுவதைத் தவிர்க்கலாம். (11.02.2022)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
05 Apr 2025