2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ரௌத்திரம் பழகு

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

“திருமணமாகி ஒன்பதே நாட்களான மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான் கணவன்” என்ற செய்தி தொடர்பான ஆதங்கத்தை, சென்ற வாரம் எனது முகநூல் பக்கத்தில் பகர்ந்தேன்.

இந்தச் செய்தி, முகநூலில் பலராலும் பகிரப்பட்ட போது பலரதும் பின்னூட்டங்களும் கண்களில் பட்டன. இப்படி அகப்பட்ட பின்னூட்டங்களில் சில, “அவன் கொலை செய்வதற்கு என்ன காரணம், மனைவியை ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அதற்கு வலிதான் காரணம்” என்ற ரீதியில் கருத்துகள் இருந்ததைக் கண்டு உண்மையில் மிக அதிர்ச்சியடைந்தேன்.

கொலையை நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுகிறவர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது, எத்தனை அயர்ச்சியானது. அதைவிட, நாம் எத்தனை பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தானே இது உணர்த்துகிறது.

மிக ஆபத்தான சூழலில் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், தற்காப்புக்காகச் செய்யப்படும் கொலைகளையே கூட நியாயப்படுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் தயங்குவதுதானே மனித மனம். யாருக்கும் யாரின் உயிரையும் பறிக்கின்ற உரிமை இல்லை என்கிற அடிப்படை அறத்தைத் தானே நாம் காலங்காலமாக நம்புவது!

ஒரு நபர் அல்லது ஒரு காரியம் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிப் போகின்ற அடிப்படை நாகரிகம் ஏன் நமக்குப் புரியவில்லை? நமக்குப் பிடிக்காதவர்கள், நம்மைப் பிடிக்காதவர்களிடம் வன்முறையைப் பிரயோகிப்பது, தண்டிப்பது, கண்டிப்பது, பழிதீர்க்க முற்படுவது, முடிவில் கொலை செய்வது - இவையெல்லாம் எப்படி மனித அறமாக முடியும்? இப்படி மனித அறமேயற்ற செயல்கள் நடக்கும்போது, மிக நிதானமான முறையில் அதற்கான பின்னணிகளை ஆய்ந்தறிய முற்படும் மனிதப் போக்கு என்பது,

நாம் வாழும் சமுதாயத்தில் வன்முறைகள் என்பவை எத்தனை சாதாரணமாக்கப் பட்டிருக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறது.
சமூக ஊடகங்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆயிரமாயிரம் குப்பைகளும், மனிதர்களை இயந்திரத்தனமாக மாற்றி வைத்திருக்கின்றன. கொலைகளும் உயிர்ப் பலிகளும், வாசித்தோ கண்டோ களித்துவிட்டுக் கடந்து போகிற சாதாரண மிக எளிய செய்திகள்.

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தவனை விடவும், அவன் அப்படிச் செய்தததற்கும் ஒரு காரணமிருக்கும் என்று சொல்லுகின்றவர்கள் மிக ஆபத்தானவர்கள்.

எம் சமூகத்தில் பெண்கள் கடூழிய சிறைக் கைதிக்கு ஒப்பானவர்கள். ஒரு பெண், பிறப்பு முதல் இறப்பு வரை யாராவது ஓர் ஆணுக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பதே விதி. இதில், திருமணத்தைப் பல பெண்கள் விடுதலை என நம்புகிறார்கள். ஒரு மாப்பிள்ளையிடம் அகப்பட்டதும் "சிறகு" வந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதொரு மாயை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம். பல படித்த தெளிவான பெண்களே, இப்படித் தெரிந்தே தன்னை ஏமாற்றி வாழ்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தன்னந்தனியாக வாழ்வது பற்றிய சமூகப் பயம் அவர்களைக் கட்டிப் போடுகிறது. ஏதோவொரு வகையில் தன்னை அவனோடு இணைத்துப்போட பழகிக்கொண்டு, அந்த வாழ்வுக்குள் மூழ்கிப் போய்விடுவதைப் பெண்கள் இயல்பாக்கிக் கொள்கிறார்கள்.

ஆண்கள் விட்டுவிட்டுப் போனால், மானம், மரியாதை, கௌரவம் போன்ற போலித்தனங்கள் போய்விடும் எனப் பொய்யாகப் பெண்கள் நம்பவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் போலிமைகளை நம்பும்படிதான் ஒரு பெண்ணின் குழந்தைப் பருவம் முதற்கொண்டு அவள் வளர்க்கப்படுகின்றாள். ஆணைச் சார்ந்திருப்பதைப் பாதுகாப்பு என்றும் அவனைச் சார்ந்து வாழாத பெண் ஒழுங்கற்றவள் - ஒழுக்கங் கெட்டவள் என்று மதிப்பீடு செய்யப்படுகின்றாள். இந்தப் போக்குகள் சமூகத்தினுள் மிக இயல்பானவை.

இந்த இயல்பாக்கல் தான், கன்னத்தில் அறைந்த ஆண்களை, கழுத்தை நெரிப்பதுவரை கொண்டு வந்திருக்கிறது. அடிப்பட்ட பெண்கள், நீலமும் சிவப்புமாய் தடித்த காயங்களைச் சமையலறையிலும் குளியலறையிலும் வழுக்கி விழுந்ததாக நடிப்புக் காட்டி, கொலை செய்யத் துணிவது வரை ஆண்களை வளர்த்து விட்டிருக்கிறார்கள்.

மதவெறியுடன் தான் ஆண் என்கிற ஆணாதிக்க வெறியும் தலைக்கேறிய ஆண்களைப் புறக்கணிக்கவே நம் பெண்கள் இன்னும் தயாராகவில்லை. புறக்கணிப்பதென்ன, அடையாளம் கண்டுகொள்ளவே இன்னும் அறியவில்லை என்பதே சரியானது. இப்போது, போதையின் வெறியும் தலைக்கேறி, கண்ணாடிக் குடுவை கணக்காகப் பெண்களை உடைத்து விளையாடும் ஆண்களிடம் அவர்கள் அகப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் கன்னத்தில் அறைந்தபோது நாம் கண்டுகொள்ளவில்லை. ஒரு அறைதானே என்று இளக்காரமாக இடங்கொடுத்து விட்டாயிற்று. அறைந்து பழகிய ஆண்களின் கைகள், கழுத்தை நெரிக்க நீள்கின்றன.

இப்போதும் நாம் மௌனித்துத்தான் இருக்கிறோம். தலைகுனிந்து நட என்று தான் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருகிறோம். உடையைச் சரிப்படுத்து, பார்வையைத் தாழ்த்து என்று, இன்னமும் சமைத்துக் கொண்டிருக்கும் நம்மைப் போலவொரு பைத்திகார அதி முட்டாள் சமுதாயம் இருக்கவே முடியாது.

என்னைக் கேட்டால், இதெல்லாம் பெண்களுக்கு அவசியமே இல்லாத கெட்டித்தனங்கள். அச்சமும் நாணமும், நாய்களுக்கு வேண்டுமாம் என்ற மகாகவி பாரதி சொல்லியதுதான் சரி. பெண்க​ள் தலைதாழ்த்தி வளர்க்கப்படக் கூடாது. அவர்கள் தலைநிமிர்ந்து நிற்கும்படி வளர்க்கப்படவேண்டும். பெண்கள் உடையைச் சரிப்படுத்த வேண்டியவர்களில்லை. தாங்கள் உடைந்து நொறுங்காதபடி துணிவுடன் வளர்க்கப்பட வேண்டியவர்கள். கன்னத்தில் அறையும் ஆணின் கையை வளைத்துப் பிடித்து மடக்கத்தான் நம் பெண்களுக்குச் சொல்லித்தர வேண்டும்.

இந்தக் காலத்தைக் கடப்பதற்கு, பெண்களுக்கு ரௌத்திரம் தேவை. தனக்கு நேரும் அநீதியை, தன் கண்ணெதிரில் நேரும் அநீதியை எதிர்க்கக் கற்றுத் தருவதே இன்றைய பெற்றோர் தம் பெண் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.

ஒரு பெண் கௌரவமாக வாழவேண்டும் என்றால், அவளுக்குத் தான் யார் என்று தெரிந்திருக்க வேண்டும். தன் பலமும் பலவீனங்களும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய சமூக அமைப்பில், பெண் தன் பலமாக ஆண்களையே நம்பும்படியாக, ஆண்களையே சார்ந்திருக்கும் படியாகவே வளர்க்கப்படுகிறாள். இந்த வளர்ப்பு முறையே நம் பெண்களைச் சவக்குழிகளுக்குள் தள்ளுகிறது.

சவக்குழிகளில் விழுவதிலிருந்து நம் பெண்களையும் எதிர்காலச் சிறுமிகளையும் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், அவர்களின் உடையையும் நடையையும் செப்பனிட்டது போதும். அவர்களின் மனதைச் செப்பனிட வேண்டும். தன்னம்பிக்கை ஊட்டவேண்டும்.

தன் பலம் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மரியாதை என்பது ஆண் என்பதால் கிடைப்பதோ பெண் என்பதால் குறைவதோ அல்ல. கொடுத்துப் பெறுவதென்று ஆண்களுக்கு சொல்லித்தரும் பெண்களையே இனி நாம் உருவாக்க வேண்டும். உரிமைகள் சுதந்திரங்களுடன் ஏற்று, சக மனுஷியாக மதித்து, ஒரு தோழனாக வாழ்வுப் பயணத்தில் இணைகிறவனை ஏற்க, நம் பெண்கள் தெளிய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X