2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

நல்லதோர் வீணை செய்தே…

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உத்தியோகம் புருஷலட்சணம்” என்றொரு சொலவடை உண்டு. அதாவது, ஓர் ஆண், உத்தியோகம் பார்க்கிறவனாக, கை நிறைய சம்பாதிக்கிறவனாக இருந்தால்தான், அவனுக்கு மரியாதை என்பதே இதன் பொருள்.

ஒரு பெண்ணுக்கு மணமகன் தேடும்போது, அவன் யார், எப்படிப்பட்டவன் என்பதை விடவும், அவன் என்ன தொழில் செய்கிறான், மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதற்குத்தான் அதிக கவனம் கொடுப்பார்கள். ஓர் ஆண், கை நிறைய சம்பாதித்தால், மனைவியை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வான், குடும்பத்தை நல்லபடியாக நிர்வாகம் செய்வான் என்ற அடிப்படைகளிலிருந்தே, இவ்வாறான எண்ணங்களும் செயல்களும் விரிவடைகின்றன.

ஓர் ஆண், ஏன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டும்? அவளது தேவைகளை அவனேதான் நிறைவு செய்யவேண்டுமா? என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடினால், இவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கக் கருத்தியல்களும் பெண் அடக்குமுறைகள் பற்றியும் தெரியவரும்.

பெண், எப்போதும் ஆணைச் சார்ந்திருப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகக் கட்டமைப்பிலிருந்து, அவளே வெளியேற நினைத்தால்கூட முடியாதபடி, இறுக்கமான பூட்டுக்களுடன், தாண்ட முடியாத உயர்ந்த சுவர்களுடன், அதிகாரங்கள் எழுந்து நிற்கின்றன. தனக்கான உணவு, உடை, உறையுள் உட்பட்ட அத்தனை அடிப்படைத் தேவைகளுக்கும் ஆணை நம்பியிருக்கும் ஒரு பெண், விரும்பியோ விரும்பாலோ, அத்தனை அதிகாரங்களுக்கும் பழக்கப்படுத்தப்படுகிறாள்.

சில சினிமாக்களில் காட்டுவதைப் போல, மனைவியை அடித்துக் கொண்டிருக்கும் கணவனிடம் யாராவது சென்று “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டால், “இது எங்கள் குடும்பப் பிரச்சினை, என் புருஷன் என்னை அடிப்பான் உதைப்பான். இதைக் கேட்க நீ யார்?” என்று, அடிவாங்கிய மனைவியே திருப்பிக் கேட்டு, கேள்வி கேட்டவரைச் சங்கடப்படுத்துவாள்.

உண்மையில், இப்படிக் கேட்பது அவளில்லை. அவளுக்குள் இருக்கும் பயம்தான் அப்படிக் கேட்கவைக்கிறது. யாராவது பஞ்சாயத்து செய்து, “இவன் கொடுமைாக்காரன்” என்று அவனிடமிருந்து அவளைப் பிரித்துவிட்டால், சோற்றுக்கு என்ன செய்வதென்ற பயம், குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்ற பயம், அக்கம் - பக்கத்தார், அயலவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம், ஏனைய ஆண்கள் தன்னை எப்படிப் பார்ப்பார்கள் என்ற பயம், தானோர் அடங்காப்பிடாரி, ஒழுக்கங் கெட்டவள், புருஷனுக்கு அடங்காத திமிர் பிடித்தவள் என்ற பட்டங்கள், வெகுமதியாக வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயம், அவளுக்குள் ஏற்பட்டுவிடுகிறது.

இத்தனைப் பயங்களையும் வெல்வதற்கான வழிகள், அவளுக்குத் தெரியவில்லை. இந்தப் பயங்களை வெல்வதை விடக் கொடுமையான வாழ்வை, தனக்கு அமைந்த சாபக்கேடாக எண்ணிக் கழிப்பதென்று திடம் கொள்கிறாள். ஆனால், “உத்தியோகம் பெண்ணுக்கும் இலட்சணம்” என்பதை அவள் புரிந்துகொண்டாலேயே போதும், தன்னை அடக்கியாளும் அத்தனை பயங்களையும் அவளால் வென்றுவிடமுடியும்.

உத்தியோகத்திலிருக்கின்ற, கை நிறைய சம்பாதிக்கின்ற பெண்களேகூட, ஆண்களிடம் அடி உதைபடுகின்றார்கள். பெண்களின் முதுகெலும்பற்ற இந்த நிலைக்கு, சுயகௌரவம் என்ற பிரக்ஞையை பெண்ணிலிருந்து அகற்றி, ஆண் மய்ய சமூக அமைப்பு வெற்றி கொண்டுள்ளதே காரணம்.

நாம் சில கேள்விகளைக் கேட்போம். பெண்களால் தொழில் பார்க்க முடியாதா, அவள் யாரையாவது சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டுமா, அவளுக்கான எதையும் அவளால் கண்டடைய முடியாதா?

பெண்களால் எந்த எல்லை வரையும் கற்கவும் தொழில் புரியவும் முடியும் என்பதற்கு, நமக்கு உதாரணங்கள் வேண்டியதில்லை. அந்தளவுதூரம் பெண்கள் சகல துறைகளிலும் வியாபித்து நிற்கிறார்கள். தீர்மானம் இயற்றவும் தங்களுக்கான விடயங்களைக் கண்டடையவும் முடியுமானளவு தெளிவும் திறமையும், பெண்களுக்குத் தாராளமாகவே உண்டு.

இருந்தும், ஏன் ஒரு பெண், ஆணைச் சார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது? ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார பலமும் தானொரு மனுஷி, உயிரும் சதையும், சுய தீர்மானம் இயற்றக்கூடிய பகுத்தறிவும் கொண்டவள் என்ற பிரக்ஞையும் வந்துவிட்டால், அவள் தானாக நிமிர்ந்துவிட மாட்டாளா? தான் யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை, தனக்கு வேண்டியதைத் தானே தெரிவு செய்துகொள்ள முடியும் என்று, பெண் எப்போது நினைக்கிறாள்?
இந்தக் கேள்விகளின் பின்னால் ஒளிந்திருக்கின்ற அரசியல், மிகச் சிக்கலானது.

காலங்காலமாகப் பெண்ணை அடக்கி ஆளுவதற்காகவே திணிக்கப்பட்ட பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்து வரக்கூடிய ஆதிக்க மனப்பாங்கே, பெண்ணின் சுதந்திர வெளியை மறுக்கச் செய்கின்றது.

பெண், பொருளாதாரமும் சுதந்திரமும், உரிமையும் கொண்டிருந்தால், ஆண் சகவாசமே தேவையில்லை என்பதல்ல இதன் பொருள். பிடித்த ஆணுடன் தன்னுடைய வாழ்வைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்திருப்பது வேறு, ஆண் அடக்குமுறைக்கும் சமூக அடக்குமுறைக்கும் பயந்து கட்டுப்பட்டிருப்பது வேறு. நாம் இங்கே பேசுவது, அடக்குமுறைகளை எதிர்ப்பதைப் பற்றியே தவிர அன்பையும் நேசத்தையும் வெறுத்தொதுக்குவதைப் பற்றியல்ல.

ஆணும் பெண்ணும் உலக வாழ்வில் நாணயத்தின் இரு பக்கங்கள். தனக்குப் பிடித்த ஆணைத் தெரிவு செய்துகொள்வதற்கான உரிமையும் அடக்கு முறைகளிலிருந்து வெளியேறுவதற்கான சுதந்திரமும் பெற்று, பெண், தனக்கான சுயகௌரவத்துடன் மகிழ்ச்சியாக வாழ, அவள் பொருளாதார பலம் பெற்றிருக்க வேண்டும்.

மித்ரா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X