2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பொலிஸாரைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியை, கடந்த ஒரு வார காலமாக ஆக்கிரமித்துள்ள மாணவர்களுக்கு எதிராகப் பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகள், பல்கலைக்கழக நிர்வாகத்தால் எடுக்கப்பட்டன.

இருந்தபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அசமந்தமாகச் செயற்படும் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டி, அதற்கெதிரான கவனயீர்ப்புப் போராட்டமொன்று, பல்கலைக்கழக ஒலுவில் வளாகப் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், இன்று (22) இடம்பெற்றது.

இப்போராட்டத்தை, பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஆகியோர் முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இயங்கிவரும் நிர்வாகப் பிரிவுக் கட்டடத்தினுள் நுழைந்து, கடமைகளைச் செய்யவிடாமல் இருந்து வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டும் பல்கலைக்கழகப் பணியாளர்கள், இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகளை கொண்டுசெல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

இம்மாணவர்களுக்கெதிராக, பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தும் பொலிஸார், அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றனர் எனவும், அதைக் கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதெனவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்தார்.

குறித்த மாணவர்களை, நிர்வாகக் கட்டடத்திலிருந்து வெளியேற்றுமாறு, நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அம்மாணவர்களை அங்கிருந்து அகற்றாமல் பொலிஸார் உள்ளனரெனவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த சில மாணவர்கள், பல்கலைக்கழகத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு கோரியே, கடந்த ஒரு வார காலமாக, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து, தமது போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .