2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பாரம்பரிய கேணி பறிபோகும் அபாயம்

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தின் பாரம்பரிய சலவைத் தொழிலுக்கான நீர் நிறைந்த  கேணியை எவ்வித அனுமதியும் இல்லாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அத்துமீறி மூடிவருவதாக  பொதுநலஅமைப்புகள் பரவலாக முறையிட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவினுள் வருகின்ற ஒரேயொரு தமிழ்க் கிராமம் திராய்க்கேணிக் கிராமமாகும்.

இக்கிராம மக்கள் பலர் பரம்பரை பரம்பரையாக இக்கேணியில் தமது சலவைத்தொழிலைச் செய்துவருகின்ற இந்நிலையில், அப்பகுதி தவிசாளர் இவ்விதம் அராஜமாகச் செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நடவடிக்கைக்கு, திராய்க்கேணி பொதுநலஅமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பரிபாலன சபையினர்,  இவ் அத்துமீறி மண்நிரப்பும் செயற்பாடு குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வரை எழுத்துமூலம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

குறித்த சபைத் தலைவர் சி.கார்த்திகேசு மற்றும்  செயலாளர் கி.புவனேஸ்வரன் இணைந்து முறையிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “திராய்க்கேணி  பாலமுனை 06ஆம் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ பெரியதம்பிரான் கோவில் பரிபாலன சபையினரின் கீழ் இக்குளம் பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவில் நிர்வாக சபையினரிடமோ அல்லது சலவைத் தொழிலாளிகளிடமோ எவ்வித அனுமதியுமின்றி எமது நிலத்திலுள்ள குளத்தை அட்டாளைச்சேனை தவிசாளர் எ.எல்.அமானுல்லா கனரக வாகனங்களின் உதவியுடன் மண்போட்டு மூடி வருகின்றார்.

“அவரது இவ் அராஜகச் செயலை உடனடியாக தடுத்துநிறுத்தி, எமது பாரம்பரிய சலவைத் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X