2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘நாடாளுமன்ற விடயங்களை பலாத்காரமாக மேற்கொள்ள முனைப்பு’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 நவம்பர் 18 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் தீர்க்கப்படவேண்டிய விடயங்களை பலாத்காரம் மூலம் மேற்கொள்ள முனைகின்றனரெனக் குற்றஞ்சாட்டிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், இது அரசமைப்பை அப்பட்டமாக மீறும் செயலாகவுள்ளதுடன், அரசியல் மரபுகளையும் அசிங்கப்படுத்துவதாகவும் உள்ளதாகத் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை மத்திய வீதியை, 10.5 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதியாகப் புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “அரசியல் பதவிகளையும், ஆட்சியையும் மக்களின் ஆணையின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணையை, குழிதோண்டிப் புதைத்து விட்டு, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வது தவறு” என்றார்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில்,  ஜனநாயகம் வாழ வேண்டும் என்பதற்காக, எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்களும் இணைந்து, பல சவால்களை எதிர்கொண்டு, போராடி வருகின்றனர்.

“தர்மம், ஜனநாயகம் போன்றவைகளை வெற்றி பெறுவதற்கு இந்தச் சுதந்திரமான போராட்டத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே, எமது மக்களின் ஆசையும், ஆவலுமாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“மக்கள் இன்று உண்மையை விளங்கிக்கொண்டுள்ளனர். அதனாலேயே, இன்று ஆட்சி அபகரிப்புக்கு எதிராக மக்கள் அனைவரும் சாரை சாரையாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்னறனர். இதற்குச் சரியானதொரு தீர்வு கிட்டும் வரையில் மக்கள் ஓயப்போவதில்லை.

“இச்சதியாட்சிக்கு எதிரான  போராட்டத்தில் கல்விமான்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் என அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் மூலம் இவ்வாறானவர்களுக்கு சிறந்ததொரு பாடத்தைப் புகட்ட  முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .