2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

த.தே.கூ முதலமைச்சர் வேட்பாளருக்கு எதிர்ப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்துவதாக தமிழரசு கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளதாக, அதன் தலைவர் எஸ். லோகநாதன் இன்று (03) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழ் மக்களுக்கான அரசியலை தலைமை தாங்கி நடத்துவதற்கும், தமிழ் மக்களின் பிரதிநிதியாக செயற்படுவதற்கும் அருகதை அற்றவர். அவற்றுக்கான ஆணையையே கடந்த பொது தேர்தலில் யாழ். மாவட்ட மக்கள் அவருக்கு வழங்கினர். அதாவது அவரை நிராகரித்து விட்டனர்.

கடந்த பொது தேர்தலில் எமது தொழிற்சங்கம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றிக்காக வட மாகாணம் முழுவதும் பிரசாரங்களை மேற்கொண்டது. அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதே யாழ். மாவட்டத்தில் மேடைகள் தோறும் எமது பிரசாரத்தின் அடிநாதமாக அமைந்தது.

அதில் நாம் வெற்றி அடைந்தோம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அவரை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்து இருப்பது எம்மை பொறுத்த வரை மிக பெரிய கேலி கூத்து ஆகும். இதை எமது மக்களும் ஏற்றுகொள்ளவே மாட்டார்களென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .