2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

சமூகம் சார்ந்த கோரிக்கைகளுடன் சர்வகட்சியில் அங்கம் பெறுக

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமூகம் சார்ந்த கோரிக்கைகளுக்கான உத்தரவாதங்களை பெற்றுக் கொண்டு, அமையப்போகும் சர்வகட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டுமென கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடயத்தை வலியுறுத்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைமைகளுக்கு அவசர கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக முன்னணியின் செயலாளர் செயிட் ஆஷிப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, ஜனாதிபதி ரணிலை சந்தித்து, சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“ஆனால், அமைச்சுப் பதவி தவிர்ந்த, சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் அவர் ஏதாவது பேசினாரா என்பது பற்றி அறியக்கிடைக்கவில்லை.

“அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தாம் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் என்ற ரீதியில் இதுவரை ஜனாதிபதியை சந்தித்து எதுவும் பேசவில்லை.

“சர்வகட்சி அரசாங்க விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் சமூக மட்டத்தில் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் ஷூரா சபை, உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட தேசிய ரீதியிலான சிவில் அமைப்புகளின் ஆலோசனைகளையாவது பெற்று செயற்படலாம்.

“இனியும் தாமதியாமல் கிடைத்திருக்கின்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, ஜனாதிபதியால் நிறைவேற்றுவதற்கு சாத்தியமான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துப் பேச முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X