2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியா்களுக்கு நியமனம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை, எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் திருகோணமலையிலுள்ள பொதுச்சேவை ஆணைக்குழுக் காரியாலயத்தில் காலை 08.30 மணியிலிருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஜி.முத்துபண்டா அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுக்கு அமைய நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சையில் 2,868 பட்டதாரிகள் சித்திபெற்றுள்ளதாக இணையத்தளத்தில் பெயர்விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், கிழக்கில் 1,440 வெற்றிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆசிரியர் சேவைப்பிரமாணக்குறிப்பிற்கமைவாக பட்டதாரிகளின் சான்றிதழ்களை பரிசோதிப்பதற்காக நேர்முகப்பரீட்சையும் திறன்களைப்பரீட்சிக்க பிரயோகப்பரீட்சையும் நடத்தப்படவுள்ளதாக பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஜீ. முத்துபண்டா குறிப்பிட்டுள்ளார்.

க.பொத. சா.த. மற்றும் உ.த சான்றிதழ்களுடன் 21.08.2017க்கு முன்பு பெறப்பட்ட பட்டச்சான்றிதழ் கொண்டுவரவேண்டும் எனக்கேட்கப்பட்டுள்ளது. 

மேலும், 6 மாதங்களுள் பெற்ற விதிவிடச்சான்றிதழ், பிறப்புச்சான்றிதழ் விவாகச்சான்றிதழ், நற்சான்றிதழ் என்பன கொண்டுவரப்படவேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலப்பிரதி மற்றும் நிழற்படப்பிரதி கொண்டுவரப்படவேண்டும். தவறினால் பிறிதொரு நேர்முகப்பரீட்சை நடத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த தினத்தில் 5 நிமிடத்துக்கு பிரயோகப்பரீட்சை நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வாய்மொழிமூல சமர்ப்பணத்துக்குத் தயாராக வரவேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .