2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கரும்புச் செய்கைக்கு எதிர்ப்பு; அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரும்புச் செய்கையில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதால், நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள், ​ அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாக இன்று (15) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை கரும்பு விவசாயிகள் சங்கம், தீகவாபி கரும்புக் கண்ட சங்கம், நுரைச்சோலை விவசாயிகள் சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ்வார்ப்பாட்டத்தை, நூற்றுக்கணக்கான விவசாயிகள், கைகளில் கரும்புகளை சுமந்துகொண்டு முன்னெடுத்தனர்.

இதனால், மாவட்ட செயலகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, பொலிஸாருக்கும் விவசாயிகளுக்குமிடையில் வாக்குவாதமும் ஏற்பட்டது.

இதனால், மாவட்ட செயலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டதால், மாவட்ட செயலகத்தில் வேறு தேவைகளுக்காகச் சென்று வருவோரும், பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 5,200 ஹெக்டெயர் காணியில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனை தனியார் கம்பனியே முன்னெடுத்துச் செல்கின்ற அதேவேளை, கரும்புச் செய்கைக்கான உள்ளீடுகள், உபகரண வசதிகள், கடன் வசதிகளை வழங்கி, கூடுதலான வட்டியில் பண அறவீடுகளை மேற்கொண்டு வருவதாலும், தமக்கு எவ்வித இலாபமும் கிடைப்பதில்லையென, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தால் ஏற்பட்ட பதற்ற நிலைமை​யை அடுத்து, ஒன்றிணைந்த கரும்புச் செய்கையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர் டி.எம். எல்.பண்டாரநாயக்கவைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டதுடன், கரும்புச் செய்கையாளர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, மாவட்ட செயலாளர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .