2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கடற்கரையிலுள்ள பொது நிலங்கள் ஆக்கிரமிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், யூ.எல்.மப்றூக்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த பிரதேசங்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், தனது குழுவினருடன் நேற்று (12) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி வேலியிடப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, குறித்த வேலிகளை அகற்றுமாறு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதேவேளை, இப்பகுதியில் தோணி மற்றும் படகுகளைச் சொந்தமாக வைத்துக் கொண்டு, கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள், உரிய அனுமதியைப் பெற்று, வாடிகளை அமைத்திருப்பார்களாயின், அது குறித்த ஆவணங்களை ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடற்கரையிலிருந்து குறித்தொதுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள் வேலிகளை அமைப்பது சட்டவிரோதமான செயற்பாடு என்பதை, பிரதேச செயலாளருடன் வருகை தந்த குழுவினர், பொதுமக்களுக்கு விளக்கினர்.

இந்நிலையில், உரிய ஆவணங்கள் ஆராயப்பட்டு, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வேலிகள் விரைவில் அகற்றப்படும் என்று, பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதி நிலங்களை சட்டவிரோதமாக இவ்வாறு வேலியிட்டு சில தனிநபர்கள் அடைத்து வருகின்றமையால், அங்குள்ள மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை, ஓய்வெடுத்துக்கொள்ளும் வகையில் கடற்கரைக்கு வருகின்ற பொதுமக்களுக்கும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கையால் இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளன.

அதேவேளை, கடற்கரைக்கு மிக சமீபமாகவுள்ள நிலங்களில், சிலர் தென்னை மரங்களை நட்டுள்ளமையாலும், அவ்வாறு தென்னை மரங்கள் நடப்பட்டுள்ள கடற்கரை நிலங்களை குறித்த தனி நபர்கள் சொந்தம் கொண்டாடுகின்றமையாலும், கடற்கரையில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஓரிருவர் இந்தப் பகுதியில் இவ்வாறு அரசுக்குச் சொந்தமான கடற்கரை நிலங்களை அபகரித்து வேலியிட்டமையைத் தொடர்ந்து, தற்போது கணிசமானோர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு சட்டவிரோதமாகக் கடற்கரைக் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டால், அந்தப் பகுதியில் வாடிகளை அமைத்து தொழில் செய்துவரும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

எனவே, அரசுக்குச் சொந்தமான கடற்கரை நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் வேலியிடும் நபர்களுக்கு எதிராக, உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்தே, குறிப்பிட்ட பகுதிகளுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரங்களையும் சிலர் அடாத்தாகக் கைப்பற்றி வருகின்றமை தொடர்பில், பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டிய பொதுமக்கள், அவ்விவகாரம் தொடர்பிலும் உடனடி நடவவடிக்கை எடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .