2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஒலுவில் துறைமுகம் மூடப்பட வேண்டும்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

“ஒலுவில் துறைமுகத்துக்கு எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பெயர் சூட்டப்பட்டிருப்பதானது ஒரு சூழ்ச்சியாகவே நோக்கப்படுகிறது. கல்முனைப் பிராந்தியத்தில் கடலரிப்பு ஏற்படுவதற்கும் கடற்றொழில் பாதிப்படைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்ற இத்துறைமுகம் உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும்” என கிழக்கிழங்கை முஸ்லிம் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோருக்கு நேற்று (16) மகஜர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைப்பின் செயலாளர் செயிட் ஆஷிப் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், நாட்டினதும் பிராந்தியத்தினதும் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஒலுவில் துறைமுக நிர்மாணத் திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.

“எனினும், குறித்த கடற்பரப்பு துறைமுக அமைப்புக்கு பொருத்தமற்றது எனவும் இதனால் மீனவர் சமூகத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது எனவும் நிபுணத்துவ ஆய்வறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.

“அவை எதுவும் கருத்தில் கொள்ளப்படாமலேயே  துறைமுக நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக ஒலுவில் கிராமத்தில் நூற்றுக்கணக்கானோரின் குடியிருப்புக் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன.

 “இத்துறைமுக நிர்மாணத்தால் நாட்டுக்கோ பிராந்தியத்துக்கோ இதுவரை எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் இழப்புகளையே சந்திக்க நேரிட்டுள்ளது. இதற்காக ஒரு கிராமம் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

“மக்கள் தமது காணிகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, நிர்க்கதியடைந்திருப்பதுடன் பாரிய கடலரிப்புக்கும் வழிவகுத்திருக்கிறது.

“கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இங்கு விஜயம் செய்து, இத்துறைமுகத்துக்கு அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடித் துறைமுகம் என்று பெயர் சூட்டி விட்டுச் சென்றுள்ளார்.

“இத்துறைமுகத்துக்கு மறைந்த தலைவரான அஷ்ரபின் பெயரை சூட்டி விட்டால் பிரச்சினைகள் எல்லாம் தாமாக தீர்ந்து விடுமா? இது மக்களை ஆசுவாசப்படுத்தி, திசைதிருப்பும் சூழ்ச்சியாகவே நோக்கப்படுகிறது.

“இவ்வாறான மாயைகளை விடுத்து, மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கி தூரநோக்குடன், ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயற்பட அரசாங்கமும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் அவசரமாக முன்வர வேண்டும்” என்றார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X