2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஒலுவில் துறைமுகத்தில் கடற்றொழில் பாதிப்பு

யூ.எல். மப்றூக்   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒலுவில் துறைமுகத்தில், படகுகள் வந்து போகும் முகப்புப் பகுதியை பாரியளவில் மண் மூடியுள்மையால், மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகளைத் தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒலுவிலில், மீன்பிடித் துறைமுகம் என்றும் வர்த்தகத் துறைமுகம் என்றும் இரு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நின்று தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், துறைமுகத்திலிருந்து கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியை மண் மூடி, படகுகளின் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மீன்பிடித்துறைமுகத்தில் தரித்து நின்ற பெரிய படகுகள் தற்போது, வர்த்தகத் துறைமுகப் பகுதியில் தரித்து நிற்கின்றன. ஆயினும், வர்த்தகத் துறைமுகத்தின் முகப்புப் பகுதியையும் தற்போது மண் மூடியுள்ளமையால், மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் சுமார் 350 படகுகள் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நிற்பது வழமையாகும். மேலும் மாத்தறை, நீர்கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த படகுகளும் - ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில், துறைமுகத்திலிருந்து கடலினுள் சென்று வரக்கூடிய போக்குவரத்து மார்க்கம் மணலால் மூடப்பட்டுள்ளமையினால், இப் பகுதியில் மீன்பிடித் தொழில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மணல் மூடியுள்ள பகுதியை படகுகள் கடக்கும் பொருட்டு, அவற்றை மனித வலுவைப் பயன்படுத்தி இழுக்க வேண்டிய நிலைவரம் ஏற்பட்டுள்ளது. இதனால், மேலதிக கூலியாட்களுக்கான செலவுகள் தினமும் தமக்கு ஏற்படுவதாகவும் கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர். 

துறைமுகத்தின் போக்குவரத்துப் பாதை, இவ்வாறு பல தடவை மணலால் மூடப்பட்டிருந்த நிலையில், அதனை அகற்றும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வைக் காண வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாகும்.

எனவே, ஒலுவில் துறைமுகப் பகுதியை மூடியுள்ள மணலை அகற்றுவதோடு, எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினை ஏற்படாத வகையில், நிரந்தரத் தீர்வொன்றைத் தமக்குப் பெற்றுத் தருமாறு, இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .