2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் வரை அரசியலுக்கு இடமளிப்பதில்லை’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் வரை, இப்பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் சார்ந்த செயற்பாடுகளை எவரும் முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதில்லை என, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் கூட்டத்தில், ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் நேற்றிரவு (24), அவசர கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மரைக்காயர்கள், சிவில் மற்றும் இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு;

"சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டச் சந்திப்பில், கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது எனவும், அதற்காக பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பது எனவும் எடுக்கப்பட்ட தீர்மானமானது, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை மழுங்கடித்து, தடுப்பதற்கான செயற்பாடாக நாம் கருதுவதுடன், அதனை முற்றாக நிராகரிக்கின்றோம்.

"பிரதமர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்குமிடையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை உறுதியாக அறிவிக்கின்றோம்.

இத்தீர்மானமானது, பிரதமரும் உள்ளூராட்சி அமைச்சரும் ஏற்கெனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.

"இவை தொடர்பாக மொத்தமாக 40 கூட்டங்கள், பல்வேறு தரப்புடனும் நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கின்ற நிலையில், மீண்டுமொரு குழு நியமனம் என்பது, இவ்வூர் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகுமெனக் கருதுகின்றோம்.

"சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் பிரத்தியோகமான எல்லைப் பிரச்சினைகளோ, இனக்கலப்போ இல்லாமையால், ஏற்கெனவே வாக்குறுதியளித்தமைக்கு இணங்க, அதனை உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

"அவ்வாறு பிரகடனம் செய்யப்படாவிட்டால், அரசியல் ரீதியாக எந்தக் கட்சியோ, அரசியல்வாதிகளோ தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வித ஒத்துழைப்புகளும் வழங்கப்படாது என்பதுடன், அவர்களும் அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

"இதற்காக பொதுமக்கள் அனைவரும் தமது அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து, எதிர்காலத்தில் எங்களால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.

"இக்கோரிக்கையை, தொடர்ந்து இழுத்தடிப்பதானது, இரண்டு ஊர்களுக்குமிடையில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துமெனஅரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .