Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ், ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தில், திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியைக்கூட, கடந்த நல்லாட்சியில் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம், தமிழ் அரசியல் தலைமைகள் மீட்டுக்கொடுக்கவில்லையென, காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி.கைறுதீன் விசனம் தெரிவித்தார்.
காணி உரிமைகான அம்பாறை மாவட்ட செயலணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு, ஒலுவில் கிறீன் வில்லா மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், வன, வனவிலங்கு மற்றும் தொல்பொருள் இலாகாக்களின் பெயரில் காலத்துக்கு காலம் திட்டமிட்டு வெளியிட்ட வர்த்தமானிகளைப் பயன்படுத்தியும், திட்டமிட்ட அபிவிருத்தியின் போர்வையிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் ஏழை விவசாயிகள் விவசாயம் செய்துவந்த காணிகளும் குடியிருப்புக் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
அதற்கு மேலாக பேரினவாத நில அபகரிப்பாளர்களின் அடாவடித்தனமான காணிப் பறிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத யுக்திகளைப் பயன்படுத்தியும் ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருவதையும் தமது செயலணி முறையாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இக்காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொறுப்பான அரசாங்க அதிகாரிகள், தங்களால் எந்தவித முன்னகர்வுகளையும் எடுக்க முடியாது என கைவிரிக்கின்றனர் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், தற்போது தேசிய கட்சிகளுக்கிடையே நிலவியுள்ள அரசியல் அதிகாரப் போட்டி நிலையில், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை அரசியல் கட்சிகளும், நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் இருக்கும் சந்தர்ப்பத்தில்கூட வாக்களித்த தமது சமூகத்தின் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அனைத்து மக்களுக்கும் உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படுவதனூடாகவே தேசிய நல்லிணக்கம் சாத்தியமாகும் என்பதனை வலியுறுத்துவதாகத் தெரிவித்த அவர், எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை தங்களின் அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படவேண்டுமாயின் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எம்முடன் இணைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்றும் கோரினார்.
இதேவேளை, அத்துமீறி காணிகளைப் பிடிப்பவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமைகளை முறையாக மேற்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், அது உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டு, அவ்வாறான காணி ஆக்கிரமிப்பாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago