2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை

அறுகம்பே: கடலலைச் சறுக்கலால் கலக்கும் ஊரு!!

A.P.Mathan   / 2012 மார்ச் 26 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


•    மப்றூக்

Surfing (சேர்ஃபிங்) எனும் விளையாட்டுப் பற்றி உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், சிலருக்கு அதுபற்றி தெரியாமல் கூட இருக்கலாம்!

Surfing (சேர்ஃபிங்) எனப்படும் விளையாட்டினை தமிழில் 'கடலலைச் சறுக்கல்' என்கின்றனர். இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் சாதனம் Surfing boad (சேர்ஃபிங் போட்) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறிய படகின் அடித்தட்டுப் போன்றதொரு தட்டையான பொருளாகும்.

இந்த Surfing boad (சேர்ஃபிங் போட்)இல் நின்றவாறு கடலலைகளில் சறுக்கிச் செல்லும் வீரர்கள் - வளைந்து, நெளிந்து சுழன்றடித்து பல்வேறு சாகசங்களைப் புரிகின்றார்கள்.

கடலலைச் சறுக்கல் விளையாட்டானது – போட்டியாக இடம்பெறும் போது, ஒவ்வொரு வீரருக்கும், குறிப்பிட்டதொரு நேரம் வழங்கப்படும். அந்த நேரத்தினுள் போட்டியாளர்கள் கடலலைகளில் சறுக்கியவாறே தமது சாகசங்களை நிகழ்த்திக் காட்ட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தினுள் திறமையினை உச்ச அளவில் வெளிப்படுத்தும் போட்டியாளர் சம்பியனாகத் தெரிவு செய்யப்படுவார்!

எமது நாட்டில் கடலலைச் சறுக்கல் விளையாட்டு அத்தனை பிரபல்யமாக இல்லாவிட்டாலும் கூட, உலக அளவில் இது – புகழ்பெற்றதொரு விளையாட்டாகும்!

அந்தவகையில், Surfing (சேர்ஃபிங்) விளையாட்டில் முன்னணிமிக்க மற்றும் திறமையுள்ள வீரர்களைக் கொண்டு, சர்வதேச கடலலைச் சறுக்கல் போட்டிகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வாறான போட்டிகளில் குறிப்பிடத்தக்கது – நமது நாட்டின் அறுகம்பே பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கடலலைச் சறுக்கல் போட்டிகளாகும்!

அறுகம்பே – பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இலங்கையிலுள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதொரு பகுதியாகும். கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்தில் அறுகம்பே அமையப் பெற்றுள்ளது.

இலங்கையிலுள்ள சிறந்த சுற்றுலாத் தளமாக அறுகம்பே பேசப்படுவதைப் போல, உலகிலுள்ள மிகச் சிறந்த கடலலைச் சறுக்கல் விளையாட்டுக்கான தளங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.

கடலின் எல்லாப் பகுதிகளிலும் Surfing (சேர்ஃபிங்) விளையாட முடியாது. கரைப் பகுதியை அண்டிவாறுதான் விளையாட முடியும். அதேவேளை, விளையாடும் கடற்பகுதி ஆழம் குறைந்ததாகவும், நீரின் அடிப்பகுதி மணற்பரப்பைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். குறிப்பாக, இந்த விளையாட்டுக்கு சாய்வாக எழும் அலைகள் மிகவும் முக்கியமானவையாகும்.

இந்தவகையில், அறுகம்பை பிரதேசம் - கடலலைச் சறுக்கலுக்கு மிகவும் சிறந்ததொரு இடமாகக் கொள்ளப்படுகிறது.

உலகிலுள்ள சிறந்த 10 கடலலைச் சறுக்கல் விளையாட்டுத் தளங்களில் அறுகம்பேயும் ஒன்றாகும். இன்னும் சொன்னால், ஆசியாவிலுள்ள கடலலைச் சறுக்கல் விளையாட்டுத் தளங்களில் - அறுகம்பே நான்காவது இடத்திலுள்ளது. இலங்கையிலுள்ள கடலலைச் சறுக்கல் விளையாட்டுக் தளங்களில்; அறுகம்பேதான் முதன்மையானது.

அறுகம்பே கடலலைச் சறுக்கல் விளையாட்டுப் பகுதியில் - அலைகள் சாய்வாக எழுவதற்குப் பிரதான காரணம் இங்கு அமைந்துள்ள மண் மலைகள் எனக் கூறப்படுகிறது. மிகப் பிரமாண்டமாக, பாரிய மலைகள் போல் அமைந்துள்ள இந்த மண் மலைகள் பார்ப்பதற்கு பிரமிப்பைத் தருகின்றன.

அறுகம்பேயிலுள்ள பிரதானமான கடலலைச் சறுக்கல் விளையாட்டுத் தளத்தினைப் போல், பத்துக்கும் மேற்பட்ட கடலலைச் சறுக்கல் விளையாட்டுத் தளங்கள் அறுகம்பேயில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Green room, Umiry, Whisky point, Pottuvil point, Arugambay point, Arugambay baby point, Crocodile rock, peanut farm, Ugantha, Yale reef ஆகியவையே அறுகம்பேயிலுள்ள கடலலைச் சறுக்கல் விளையாட்டுத் தளங்களாகும்.

1960 களிலிருந்து அறுகம்பேயில் Surfing (சேர்ஃபிங்) இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் சர்வதேச மட்டத்தில் Surfing (சேர்ஃபிங்) விளையாட்டுக்கு அறுகம்பே - பிரபல்யம் பெற்றது. இது தொடர்பில் அறுகம்பே சுற்றுலா அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ.றஹீமுடன் நாம் பேசினோம். அவர் பல்வேறு தகவல்களை வழங்கினார்.

அதாவது, 2004ஆம் ஆண்டு பிருத்தானியாவின் British pro surf Association எனும் அமைப்பு அறுகம்பேயில் சர்வதேச கடலலைச் சறுக்கல் போட்டியொன்றை நடத்தியது. அதன்போது அந்த போட்டி குறித்து ஊடகங்கள் வழங்கிய செய்திகளால் அறுகம்பே பிரதேசத்தை Surfing விளையாட்டுக்கான தளமாக சர்வதேசம் அடையாளம் கண்டது. இதன் பிறகு உலகின் கடலலைச் சறுக்கல் வீரர்களெல்லாம் அறுகம்பை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

அதேவேளை, மேற்சொல்லப்பட்ட British pro surf Association அமைப்பினர் வருடா வருடம் Surfing விளையாட்டுப் போட்டியை சர்வதேச ரீதியாக அறுகம்பேயில் நடத்த ஆரம்பித்தார்கள்.

இந்தவகையில், அறுகம்பே பிரதேசம் இன்று கடலலைச் சறுக்கல் விளையாட்டுக்கு உலகளவில் புகழ்பெற்றதொரு இடமாக மாறியுள்ளது.

அறுகம்பே பகுதிக்கு இன்னும் சில மாதங்களில் செல்வோர் - கடலலைச் சறுக்கலில் கலக்கும் அந்த ஊரையும், வீரர்களையும் பார்த்து மகிழலாம்!

You May Also Like

  Comments - 0

  • naleem Tuesday, 27 March 2012 03:06 AM

    அருமையான கட்டுரை, அழகான விபரிப்பு, பொத்துவில் ஊரான் என்ற வகையில் சொல்லவில்லை. உண்மையில் யதார்த்தத்தையும், இயற்கையையும் சரியான முறையில் ரசித்து எழுதிருகிறீர்கள்.... சொந்த ஊரான் என்பதை மறந்து மீண்டும் ஒரு முறை ரசிகனாக சென்று பார்த்து ரசிகனும் போல இருக்கிறது..
    வாழ்த்துகள் மப்ரூக்.......நன்றி.

    பொத்துவில்_Mohamed Naleem

    Reply : 0       0

    meenavan Tuesday, 27 March 2012 05:53 AM

    மப்றூக் ஊடகவியலாருக்குரிய ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டு உள்ளூரவர்களின் கருத்தினை தொகுத்து எழுதியுள்ளார், உண்மையில் அறுகம்பை surfing point இலங்கையின் முதல் தரமானது,கடலின் அடிப்பகுதி பாறைகளுடன் கூடியது என்பது சற்று பிரதிகூலம்,1982-84 காலபகுதியில் கடலலை சறுக்கல் (surfing) செய்து அனுபவித்தவன் என்பதனால் கூறுகிறேன்,இப்போதைய மாற்றங்களை அறியேன்,மப்றூக்கின் முயற்சிக்கு பாராட்டுகள், ஆங்கில நூல்களின் மூலம் கூடிய தகவல் பெறலாம்.

    Reply : 0       0

    issadeen Thursday, 29 March 2012 12:39 AM

    பூகோள ரீதியாக மப்ரூக் எழுதியுள்ள கட்டுரை ரொம்ப அழகானது நன்றி மப்ரூக்.

    Reply : 0       0

    rafi Monday, 02 April 2012 04:06 AM

    எஸ் இட்ஸ் துரு !

    Reply : 0       0

    A.C. Thoufeek Wednesday, 04 April 2012 05:22 PM

    aarainthu எழுதியதற்கு பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    Mohamed Aboobucker Irfan Saturday, 14 April 2012 02:14 PM

    பொத்துவிலின் வளங்களை நினைத்து சந்தொசமாக உள்ளது. இருந்தாலும் கலாச்சார சீரழிவுகளை நினைத்து பயமக உள்ளது .
    அல்லாவே எங்கள் ஊரை பதுகாக்கப்பா .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X