2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

வௌவாலுக்குக் ‘குறி’ தாதியின் நெஞ்சில் ‘டப்’

Editorial   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

தன்னுடைய வீட்டின் மேல்மாடியிலிருந்து, எதிரே நின்ற மாமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களுக்கு, ‘எயார்கண்’ துப்பாக்கியால் வைக்கப்பட்ட ‘குறி’கள் தவறியதால், எதிர்வீட்டின் கீழ் தளத்திலிருந்த தாதி, படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

‘எயார்கண்’ துப்பாக்கி உருண்டைகள், தாதியின் நெஞ்சிலேயே பட்டுள்ளன. காயமடைந்த 55 வயதான அந்தத் தாதி, தான் கடமையாற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய எதிர்வீட்டு பொறியியலாளர், கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3ஆம் குறுக்குத் தெருவில், தாதியரும் பொறியியலாளரும் எதிரெதிர் வீடுகளில் வசிக்கின்றனர். சம்பவ தினமான நேற்று முன்தினம் (22) செவ்வாய்க்கிழமை இரவு, ‘எயார்கண்’ துப்பாக்கியுடன், தன்னுடைய வீட்டின் மேல் மாடிக்குச் சென்ற பொறியியலாளர், வௌவால்களுக்குக் குறிவைத்துச் சுட்டுள்ளார்.

சுமார், ஏழு அல்லது எட்டு தடவைகள் ‘டப்டப்’ எனச் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சதம் கேட்டு, நாய்களும் குரைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடியுள்ளன. என்னவோ, ​ஏதோவெனப் பார்ப்பதற்காக, உள் அறையிலிருந்து தாதியும் ஓடிவந்துள்ளார். அப்போது, வௌவால்களுக்கு வைத்த குறிகளில் சில தவறிவிட்டன. அவை, எதிர்வீட்டின் கீழ் தள ஜன்னல் கண்ணாடிகளைத் துளைத்துக்கொண்டு, தாதியின் நெஞ்சைப் பதம்பார்த்துள்ளன.

சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ள பொறியியலாளர், ​கொழும்பிலுள்ள அரச திணைக்களத்தில் கடமையாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எதிர்வீட்டின் வளாகத்தில் நின்றிருந்த மாமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வௌவால்களுக்கே அவர், ‘எயார்கண்’ துப்பாக்கியால் சுட்டுள்ளார் என, ஆ​ரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராச்சி தலைமையில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  எம். முஹமட், தடயவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .