2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

புனித ஜோசப் வாஸ் அடிகளார் ஆலயம் திறப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் 75ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை (16) மன்னார் தோட்டவெளி புனித ஜோசப் வாஸ் அடிகளார் ஆலயத் திறப்புவிழா இடம்பெற்றது.

மன்னார் மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக, இராயப்பு ஜோசப் 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி மடுத்திருத்தலத்தில் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தனது பெற்றோருக்கு நான்காவது புதல்வாரான இவர் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியின் ஒரு பகுதியை நெடுந்தீவு புனித சவேரியார் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் பயின்றார்.

1950ஆம் ஆண்டில் மன்னார் மறை மாவட்டத்தின் செட்டிக்குளத்தில் குடியேறினார். 1954ஆம் ஆண்டு முருங்கன் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் அங்குள்ள விடுதியிலும் தங்கியிருந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இதன் பின்னர் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில், மறைந்த ஆயர் எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகையால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முருங்கன் உயிலங்குளம் பங்கில் துணைப் பங்கு குருவாக நியமிக்கப்பட்டு தனது குருத்துவப்பணியை தொடர்ந்தார்.  

தனது 75ஆவது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து தோட்டவெளியில் குடியேறியிருக்கும் மக்களால் நிர்மாணிக்கப்பட்ட புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் புதிய ஆலயத்தை அபிஷேகம் செய்து திறந்து வைத்தனர்.

ஆயர்களான தோமஸ் சவுந்தரநாயகம், ஜோசப் பொன்னையா, கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை, நோபட் அந்தாடி உள்ளிட்ட பல கத்தோலிக்க குருக்கள் துறவிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .