2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிட்னி முருகன் தேர்த்திருவிழா

A.P.Mathan   / 2014 மார்ச் 18 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் சனிக்கிழமை (15) கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வார இறுதி நாளில் தேர்த்திருவிழா உற்சவம் இடம்பெற்றமையினால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

முதலாவது காலைப் பூசை 5:30 மணிக்கும் இதனைத் தொடர்ந்து காலசந்திப் பூசை, இரண்டாவது காலப் பூசை, யாக பூசை ஆகியன 7:00 மணிக்கும் இடம்பெற்றன.

முருகனுக்கான அபிசேகம் 7:30 மணியளவிலும் சிறப்பு பூசை 8:30 மணியளவிலும் இடம்பெற்றன.

கொடித்தம்பப் பூசையும் 108 போற்றி வழிபாடும் 8:50 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை 9:30 மணியளவில் இடம்பெற்றது.

மங்கல இசையினை ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோருடன் உள்ளுர் கலைஞர்களான சத்தியமூர்த்தி, வைத்தீஸ்வரன் ஆகியோர் வழங்க, முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேததராய் 10:30 மணியளவில் உள்வீதிவலம் எழுந்தருளினார்.

பக்தர்களின் அரோகரா கோசமும் மங்கல இசையும் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேதரராய் வீதி உலா வந்த காட்சியும் நல்லூர் கந்தன் ஆலயத்தில் இருக்கின்றோமோ எனும் பிரமையை எல்லோர் மத்தியிலும் கொண்டு வந்து இருந்தது. அது மட்டுமல்லாது இளையோர்கள் பலர் முருகப்பெருமானை தமது தோள்களில் பயபக்தியுடன் சுமந்து சென்ற காட்சி எதிர்கால சந்ததி ஆன்மீகத்தோடு தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்பதனை கட்டியம் கூறி நின்றது என்றால் மிகையாகாது.

உள்வீதிவலத்தினைத் தொடர்ந்து 11:15 மணியளவில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேதரராய் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் விண் அதிர தேரில் எழுந்தருளினார். ஆண்-பெண் இருபாலரும் இணைந்து தேரின் வடம் பிடித்து இழுத்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பக்தர்கள் காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சனம் செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

தேர் பின் வீதியில் வந்து கொண்டிருந்த போது அடைமழை பெய்தது. இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து தேர்த் திருவிழாவில் பங்கேற்றுக் கொண்டு இருந்தனர்.

தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததும் பிற்பகல் 1:15 மணியளவில் முருகப்பெருமான் தேரில் இருந்து பச்சை சாத்தப்பட்ட நிலையில் இறக்கப்பட்டு 2:30 மணியளவில் சண்முகார்ச்சனை இடம்பெற்றது.

சாயரட்சை பூசை 3:30 மணியளவிலும் மீனாட்சி அபிசேகம் 3:45 மணியளவிலும் யாக பூசை 4:00 மணியளவிலும் இடம்பெற்றன.

மாலைப் பூசை 4:30 மணியளவில் தொடங்கியதனைத் தொடர்ந்து 5:00 மணியளவில் திருவிளக்குப் பூசை இடம்பெற்றது.

இரண்டாவது பூசையான மாலைப் பூசை 5:30 மணியளவிலும் கொடித்தம்பப் பூசை, 108 போற்றி வழிபாடு ஆகியன 5:50 மணியளவில் இடம்பெற்றன.

வசந்த மண்டபப் பூசை 6:30 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஈழத்து கலைஞர்கள் மங்கல இசையினை வழங்க முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேததராய் 7:15 மணியளவில் உள்வீதி வலமும் 7:45 மணியளவில் வெளிவீதி வலமும் எழுந்தருளி செய்தார்.

இருப்பிடத்துக்கு முருகப்பெருமான் சென்றதனைத் தொடர்ந்து ஈழத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் வழங்கிய மங்கல இசை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அர்த்தசாமப் பூசையுடன் தேர்த்திருவிழா உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.

வார இறுதி நாளில் தேர்த் திருவிழா உற்சவம் இடம்பெற்றதனால் பல மாநிலங்களில் இருந்தும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான முருகப்பெருமானின் பக்தர்களுக்கு தாகசாந்தி மற்றும் அன்னதான ஏற்பாடுகளை சிட்னி முருகன் ஆலய சைவமன்ற நிர்வாகம் சிறப்பாக செய்து இருந்தது.

முதற்தடவையாக சிட்னி முருகனின் வருடாந்த மஹோற்சவ நிகழ்வுகளை Youtube இணையத்தளம் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு சைவமன்ற நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து இருந்தது. அந்த வகையில் தேர்த் திருவிழா உற்சவமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .