2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிட்னி முருகனின் வருடாந்த மஹோற்சவம்

A.P.Mathan   / 2014 மார்ச் 10 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் சனிக்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
 
முதலாவது காலைப் பூசை 7:00 மணிக்கும் இரண்டாவது காலப் பூசை 8:00 மணிக்கும் இடம்பெற்றன.
 
இதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு முருகனுக்கான அபிசேகம், பூர்வ சந்தானம், வஜ்ர சந்தானமாகிய கொடிச் சீலைக்கு உரிய பூசைகள் இடம்பெற்றன.
 
சிறப்பு பூசை 9:00 மணிக்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து 10:30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றது.
 
சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் தலைமையில் பிற்பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.
 
மங்கல இசையினை ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோருடன் உள்ளுர் கலைஞர்களான சத்தியமூர்த்தி, வைத்தீஸ்வரன் ஆகியோர் வழங்க, முருகப்பெருமானின் உள்வீதி வலம் 12:45 மணிக்கு தொடங்கியது.
 
இதனைத் தொடர்ந்து வெளி வீதி வலம் 1:15 மணிக்கு தொடங்கியது. மீண்டும் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தினை சென்றடைந்ததும் அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
 
இரவுத் திருவிழா
 
சாயரட்சை பூசை 4.15 மணிக்கு இடம்பெற்றதனைத் தொடர்ந்து 4:30 மணிக்கு யாக பூசை இடம்பெற்றது.
 
இரண்டாவது மாலைப் பூசை 5:30 மணிக்கு தொடங்கி, அதைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை, 108 போற்றி வழிபாடு ஆகியன இடம்பெற்றன.
 
வசந்த மண்டபப் பூசை 6:30 மணிக்கு இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த கலைஞர்களுடன் உள்ளுர் கலைஞர்களும் இணைந்து மங்கல இசையினை வழங்க முருகப் பெருமான் உள்வீதி வலம் 7:15 மணிக்கு தொடங்கியது.
 
இரவு 7:45 மணிக்கு தொடர்ந்து வெளிவீதி வலம் தொடங்கி, முருகப்பெருமான் 8:30 மணியளவில் இருப்பிடத்துக்கு சென்றடைந்ததும் சிறப்பு மங்கல இசை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அர்த்த சாமப்பூசை இடம்பெற்றது.
 
வார இறுதி நாளில் திருவிழா இடம்பெற்ற காரணத்தினால் சிட்னி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் குறித்த திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.
 
எதிர்வரும் வியாழக்கிழமை (13) மாம்பழத் திருவிழாவும், வெள்ளிக்கிழமை (14) வேட்டைத் திருவிழாவும், சனிக்கிழமை (15) சப்பறத் திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை (16) தேர்த் திருவிழாவும், திங்கட்கிழமை (17) தீர்த்தத் திருவிழாவும் சிறப்பு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இறை அடியார்கள் அனைவரும் திரண்டு வந்து சிட்னி முருகன் மஹோற்சவத்தைக் கண்டுகளித்து முருகனின் அருளாசிகளைப் பெற்று உய்யுமாறு சிட்னி முருகன் ஆலய சைவமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.





You May Also Like

  Comments - 0

  • Poopalasingam Monday, 10 March 2014 11:50 PM

    கோவில்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .