2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிட்னி முருகனின் வருடாந்த மஹோற்சவம்

A.P.Mathan   / 2014 மார்ச் 06 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் எதிர்வரும் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த வருட மஹோற்சவத்தை சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் முன்னின்று நடத்த உள்ளார்.

மஹோற்சவத்தின் போது ஆலயத்தில் மங்கள இசையை வழங்குவதற்காக ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

எதிர்வரும் 17ஆம் திகதி வரையான 10 நாட்களும் நடைபெறவுள்ள மஹோற்சவத்தில், மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா, தேர்த் திருவிழா (16.03.14), தீர்த்தத் திருவிழா (17.03.14) ஆகியவையும் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன.

முருகன், வள்ளி-தெய்வானை திருமண நிகழ்வாக பூங்காவனத் திருவிழா (18.03.14) நடைபெறும். இதனை சிட்னியில் பிரதேச வாரியாக வாழ்ந்து வரும் இளையோர்கள் சிறப்புற நடத்துவர்.

காலையும், மாலையும், அலங்கரிக்கப்பட்ட சிட்னி முருகன் தினமொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். அத்தோடு, அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சை செய்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.

அவுஸ்திரேலியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் முருகன் அடியார்களுக்காக அன்னதானம், தண்ணீர்ப் பந்தல், போக்குவரத்து வசதிகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் திருவிழாக்களும் சிட்னியில் பிரதேச வாரியாக வாழ்ந்து வாழும் பக்தர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.

திருவிழாக் காலங்களில் ஆலயத்தில் மதிய நேரம் அன்னதானம் வழங்கப்படும். இரவு திருவிழாவின் போது பிரதேச வாரியான பக்தர்கள் இரவு நேர உணவை ஆலய உணவுச்சாலையில் தயாரித்து விற்பனை செய்வார்கள்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி, ஆலயத் திருப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறை அடியார்கள் அனைவரும் திரண்டு வந்து சிட்னி முருகன் மஹோற்சவத்தைக் கண்டுகளித்து முருகனின் அருளாசிகளைப் பெற்று உய்யுமாறு சிட்னி முருகன் ஆலய சைவமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .