2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

விதிகளை தெளிவுபடுத்திய டுவிற்றர்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 30 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறான நடத்தை தொடர்பாக டுவிற்றர் பயனர் கணக்குகள் அழிக்கப்படும் நிலையிலும், குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிராக வன்முறையை தோற்றுவிக்கும் வெறுப்பு நடத்தைகள் தடை செய்யப்படுகின்ற நிலையிலும் இவை எவ்வாறு அடையாளங் காணப்படுகின்றன என்பதை டுவிற்றர் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (29), டுவிற்றர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வலைப்பதிவு ஒன்றிலேயே மேற்கூறிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது, தனது பிரசாரத்துக்கும் ஆட்சேர்ப்புக்கும் டுவிற்றரை பயன்படுத்தி வருகின்றதெனவும், இதைத் தடுப்பதற்கு  டுவிற்றர் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென அதிகரித்து வரும் விமர்சனங்களையடுத்தே மேற்படி விதிமுறைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த டுவிற்றரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பணிப்பாளர் மேகன் கிறிஸ்டினா, எப்போதும் போல, பல்வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளை நாங்கள் தழுவுவதாகவும் ஊக்குவிப்பதாகவும் ஆனால் எல்லையைக் கடந்து துஷ்பிரயோகமாக மாறும் கணக்குகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

எனினும் மேற்படி வெளிப்படுத்தப்பட்ட தகவல்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போ அல்லது வேறெந்த குழுவின் பெயரோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

வெளிப்படுத்தப்பட்ட விதிகளின் படி, இனம், நிறம், பால் நாட்டம், பால், பால் அடையாளம், சமயம், வயது, அங்கவீனம், நோய் ஆகிவற்றின் அடிப்படையில் வன்முறையை ஊக்குவிக்கவோ அல்லது நேரடியான தாக்குதலில் ஈடுபடவோ அல்லது ஏனையவர்களை அச்சுறுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர், ஏனையவர்களுக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கும் பயனர்கள் தடை செய்யப்படுவார்கள் என்று பொதுவான எச்சரிக்கையே டுவிற்றர் நிறுவனம் கொண்டிருந்தது.

இதேவேளை, டுவிற்றர், பேஸ்புக் உள்ளடங்கலான சமூக வலைத்தளங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து,மத்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என இந்த மாதத்தின் ஆரம்பத்தில் காங்கிரஸில் முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .