2024 நவம்பர் 23, சனிக்கிழமை

தரையிறங்கியது iPhone 7

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 08 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த, திறன்பேசி ஜாம்பவானான அப்பிள் நிறுவனத்தின் புதிய வரிசை iPhone ஆனது, இலங்கை நேரப்படி, புதன்கிழமை (07) இரவு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகமாவதற்கு முன்னரே, சமூகவலைத்தளங்கள், இணையத்தளங்களில், புதிய திறன்பேசியானது அவ்வாறு இருக்கும், இவ்வாறு இருக்கும் என பல தகவல்கள், புகைப்படங்கள் கசியவிடப்பட்ட நிலையில், ஏறக்குறைய அவற்றினை பிரதிபலிப்பதாகவே அப்பிளின் புதிய திறன்பேசி அமைந்துள்ளது.

செப்டெம்பர் மாதத்தில், சான் பிரான்ஸிஸ்கோவில் இடம்பெறும் அப்பிளின் வருடாந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே வழமையாக, அப்பிளின் புதிய வரிசைத் திறன்பேசிகள் வெளிப்படுத்தப்படும் நிலையில், அதுவரையில், புதிய திறன்பேசியினுடைய பெயர், அதன் தகவல்கள் பரம இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், அப்பிளின் வருடாந்த ஊடகவியலாளர் வருடாந்த மாநாடு இம்முறை ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே, இணையத் தள விற்பனை ஜாம்பவானான அமெஸொனில், அப்பிளின் புதிய வரிசை திறன்பேசியின் பெயர் iPhone 7 என வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அமெஸொனில் காணப்பட்டிருந்த iPhone 7க்கான உறைகளின் விளம்பரத்தின் மூலமே, அப்பிள் நிறுவனத்தின் புதிய திறன்பேசிப் பெயர் வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த அப்பிளின் மாநாடு நடந்து கொண்டிருக்கையில், மாநாட்டில், அப்பிளின் புதிய வரிசை திறன்பேசி வெளிப்படுத்தப்பட முன்னரே, அப்பிளின் டுவிட்டர் கணக்கில், iPhone 7 தொடர்பான தகவல்கள் அடங்கிய காணொளி ஒளிபரப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், iPhone அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில், ஒரு பில்லியன் iPhoneகளை அப்பிள் நிறுவனம் விற்றுள்ளதான தரவுடன், அப்பிளின் பிரதம நிறைவேற்றதிகாரி டிம் குக், அப்பிளின் புதிய வரிசை iPhoneஐ அறிமுகப்படுத்தினார்.

புதிய iPhone 7இன் புறத்தோற்றமானது, ஏறத்தாழ முன்னைய iPhone 6S போன்றே அமைந்திருந்தாலும், புதிய iPhone 7இல், மேம்படுத்தப்பட்ட கமெரா அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், iPhone வரலாற்றில், இதுவரையில்லாத பெறுபேறுகளை வழங்கக்கூடிய மின்கலம், Stereo ஒலிபெருக்கிகள், மிகவும் பிரகாசமான வர்ணமயமான திரை ஆகியவற்றையும் iPhone 7 கொண்டுள்ளது.

இந்நிலையில், நீர் உட்புகாத வகையிலும் தூசிகள் உட்புகாத வகையிலும் அமைந்துள்ள iPhone 7 ஆனது, ஒரு மீற்றர் ஆழத்தில் 30 நிமிடங்களுக்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய iPhone 7, iPhone 7 Plusகளில் 12 megapixel பின்புறக் கமெரா காணப்படுவதுடன், optical image stabilization காணப்படுவதுடன், f/ 1.8 aprture காணப்படுவதால், மிகவும் பிரகாசமான மற்றும் தெளிவான புகைப்படங்களையும் காணொளிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். iPhone 7 Plusஇல் மேலதிகமாக 12-megapixel telephoto கமெராவும் காணப்படுகின்றது. இதன் காரணமாக, இரண்டு மடங்கு optical zoomஐ பெற முடியும் என்பதுடன் 10 மடங்கு digital zoomஐ புகைப்படங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

இது தவிர தெளிவான வர்ணமயமான செல்பிகளுக்காக, 7-megapixel முன்புறக் கமெராவையும் வழங்குகின்றது. தவிர, iPhone 6s ஐ விட 50 சதவீதமான பிரகாசத்தை வழங்கக்கூடிய Quad-LED True Tone flashஐயும் அப்பிள் வழங்குகின்றது.

இந்நிலையில், இதுவரையில் எந்த திறன்பேசியில் இல்லாதவாறு சக்தி வாய்ந்த A10 Fusion Chipஐ வழங்குகின்ற அப்பிள், இதுவரை வந்த iPhoneகளில் இல்லாதவாறான சக்தி வாய்ந்த மின்கலத்தையும் வழங்குகின்றது. இது தவிர புதிய Home Button ஆனது, பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கான விசையை அடையாளங்கண்டு அதற்கேற்ற வகையில் தொழிற்படவுள்ளது.

iPhone 6ஐ விட இரண்டு மடங்கு வேகமாக இயங்கும் iPhone 7, Graphics செயற்பாடுகளில், iPhone 6இன் மூன்று மடங்கு வேகமாக இயங்குகின்றது. திறன்பேசி விளையாட்டுப் பிரியர்களுக்கு இது நிச்சயம் இனிப்பை வழங்கக்கூடிய செய்தியாயிருக்கும். இது தவிர, இவ்வருட இறுதியில், அப்பிளின் App Storeஇல், Super Mario விளையாட்டும் வரவுள்ளது.  

இது தவிர, iPhone 7 ஆனது 25 வரையான LTE சேவைகளில் இயங்கி, உலகத்தில் சிறந்த இணைய இணைப்பைப் பெறக் கூடிய சாதனமாக இருப்பதுடன், iPhone 6 பெற்ற இணைய வேகத்தினை விட மூன்று மடங்கான 450MBs வரையான இணைய வேகத்தைப் பெறுகின்றது.

இதேவேளை, iPhone 6sஇனை இரண்டு மடங்கு சத்தமான ஒலியை வழங்குகின்ற Stereo ஒலிபெருக்கிகளை iPhone 7 கொண்டமைந்துள்ளது.

ஏற்கெனவே இருக்கின்ற silver, gold, rose gold நிறங்களை விட இரண்டு கறுப்பு நிறங்களில் iPhone 7 வருகின்றது. 32GB, 128GB, 256GB  ஆகிய மாதிரிகளில் iPhone 7 கிடைக்கின்ற நிலையில், இதன் அறிமுக விலை 649 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருக்கிறது. எவ்வாறெனினும் புதிய jet black என்ற நிறத்திலான திறன்பேசிகள் 128GB, 256GB மாதிரிகளில் மாத்திரமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. iPhone 7 Plusஇன் ஆரம்பவிலை 769 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

iPhone 7, iPhone 7 Plus ஆகிய திறன்பேசிகளுக்கான முற்பதிவுகளை, இன்று வெள்ளிக்கிழமை (09) மேற்கொள்ள முடியும் என்பதுடன், அடுத்த வெள்ளிக்கிழமை (16) முதல், 28 நாடுகளில் சந்தைக்கு வரவுள்ளதுடன், அதற்கு அடுத்த கிழமையில், மேலும் 30 நாடுகளில் சந்தைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இனி வரவுள்ள iPhone 6S Plusகள், 32GB, 128GB மாதிரிகளாகவே வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X