2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

கூகுள் ஸ்டோரிலிருந்து தலிபான் செயலி நீக்கம்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான தலிபானால் அன்ரொயிட் அலைபேசி இயங்குதளத்திலுள்ள அலைபேசிகளுக்கு என உருவாக்கப்பட்ட செயலியான அலேமரஹ் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த அலேமரஹ் செயலியின் உள்ளடக்கங்கள் பஷ்தோ மொழியில் இருந்ததுடன், அதில், ஆப்கானிஸ்தான் தலிபானின் உத்தியோகபூர்வ அறிக்கைகளும் காணொளிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த அலேமரஹ் செயலியானது இம்மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தமது செயலி காணாமற் போனதுக்கு தொழில்நுட்பப் பிரச்சினைகளே காரணம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் கூகுள் செயலி நெறிமுறைகளில் வெறுப்பு பேச்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் செயலி நெறிமுறைகளை மீறியதன் காரணமாகவே கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அலேமரஹ் செயலி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜிகாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Site Intel நிறுவனத்தாலேயே மேற்படி செயலி கண்டுபிடிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் குறிப்பிட்ட செயலிப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்த கூகுள், பயனர்களுக்கும் உருவாக்குநர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும் பொருட்டே எமது கொள்கைகள் வடிவமைக்கப்பட்டதுடன், இந்த கொள்கைகளை மீறும் செயலிகளையே கூகுள் பிளேயிலிருந்து தாங்கள் நீக்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .