2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஓஃப்லைனிலும் இயங்குவுள்ள Google Maps

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 11 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகிளானது, தனது அன்ட்ரொயிட் வரைபடங்களை திறமுயர்த்தியுள்ளது. இதன்படி, இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் வழியைக் காட்டும் வகையில், திறனுயர்த்தப்பட்ட  வரைபடங்கள் அமைந்துள்ளன.

இது தவிர, இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் வியாபார நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள், அவை திறக்கப்படும் நேரம், அவற்றின் தொலைபேசி இலக்கம் என்பனவற்றையும் திறனுயர்த்தப்பட்ட  வரைபடங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய இணைப்பு இல்லாத இடங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உள்ளவர்கள், இணைய இணைப்புக்காக அதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ள நிலையில், இவர்களே, இந்தப் புதிய திறனுயர்த்தப்பட்ட  வரைபடங்கள் மூலம் அதிக நன்மையடைவர் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

எனினும், ஆரம்ப நிலையில் உள்ள அன்ட்ரொயிட் திறன்பேசிகளில் குறைவான சேமிப்பகமே உள்ள நிலையில், இவ்வகையான திறன்பேசிகளில் திறனுயர்த்தப்பட்ட  வரைபடங்களை தரமிறக்கும்போது சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பெரும்பாலான இலண்டன் பெருநகர்ப்பகுதி வரைபடங்களை தரவிறக்குவதற்கு 380MB தேவைப்படுவதுடன், சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி வரைபடங்களை தரவிறக்குவதற்கு 200MB தேவைப்படும் என கூகிள் தெரிவித்துள்ளது.

இதேவேளை iOS சாதனங்களுக்குரிய இது மாதிரியான, திறனுயர்த்தப்பட்ட வரைபட இற்றைப்படுத்தல்களை விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாக தெரிவித்த கூகிள், எனினும் இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படுமா என்று உறுதிப்படுத்தவில்லை.

இந்தப் புதிய திறனுயர்த்தப்பட்ட வரைபடங்களின் வசதிகளை பெறும் பொருட்டு, இதைப் பயன்படுத்தும் பயனர்கள், தமக்கு தேவையான பிரதேசங்களை தெரிவு செய்து, அந்தப் பிரதேசங்களை தரவிறக்குமாறு செயலிக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதனையடுத்து தகவல்கள் நிறுவப்பட பின், செயலியானது இணைய இணைப்பு உள்ளபோது அதற்கேற்றவாறும், இல்லாதபோது அதற்கேற்றவாறும் செயற்படும்.

உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நபர், இணைய இணைப்பு இல்லாமல் தனது பயணத்தை ஆரம்பிக்கும்போது, ஏற்கனவே இருக்கின்ற தகவல்களை வைத்துக் கொண்டு செல்லும் பாதையையும், செல்ல எடுக்கும் நேரத்தையும் வழங்கும் செயலி, அதன் பின்னர் இணைய இணைப்பைப் பெற்ற பின், அப்போதைய நிலையில் வாகன நெரிசல் எவ்வாறுள்ளது, விபத்து எதுவும் செல்லும் பாதைகளில் செல்லுமா என காட்டவுள்ளது.

இதேவேளை, இணைய இணைப்பு இல்லாமல் இயங்கும் வரைபடமானது, ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இற்றைப்படுத்தல்களை கொண்டிருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.

இணைய இணைப்பு பெரும்பாலான வசதிகளைக் கொண்டிருந்தாலும், சில கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. இதில், உணவகங்கள் தொடர்பாக பயனர்கள் வழங்கும் விமர்சனங்கள் இதில் காட்டப்பெறமாட்டாது. தவிர, இதில் பயனர்கள், செய்மதி வரைபடங்களை பார்வையிட முடியாது. மேலும் இந்த வரைபடங்களில், சாரதி ஒருவர் செலுத்தும் பாதையே காணப்படுவதுடன், நடந்தோ அல்லது பொதுப் போக்குவரத்தில் பயணிப்போரோ தமது பாதைகளை பெற்றுக் கொள்ளமுடியாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .