2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஐந்தாவது இடஞ்சுட்டல் செய்மதியை ஏவியது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 20 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வான் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளின் ஆரவாரத்துக்கு மத்தியில், பி.எஸ்.எல்.வி ரொக்கெட் ஒன்றின் மூலம், ரொக்கெட் தளமான ஸ்ரீஹரிகொத்தாவிலிருந்து, தனது ஐந்தாவது இடஞ்சுட்டல் செய்மத்தியான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இயை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது.

மேற்படி இடஞ்சுட்டல் செய்மதியை ஏவியதன் மூலம், சொந்தமாக இடஞ்சுட்டல் செய்மதி அமைப்புக்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இணைவதற்கான முயற்சியில், மேலுமொரு காலடியை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், மேற்படி வெற்றிகரமான இடஞ்சுட்டல் செய்மதி ஏவலையடுத்து, இந்திய வான் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்தியப் பிராந்திய இடஞ்சுட்டல் செய்மதி அமைப்பின் ஏழு செய்மதி கொண்ட தொகுதியின் ஐந்தாவது இடஞ்சுட்டல் செய்மதியே ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ ஆகும். தற்போது, மேற்படி அமைப்பானது ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஜி.பி.எஸ்க்கு சமமாக இருக்கின்றது.

பி.எஸ்.எல்.வி ரொக்கெட்டானது, 320 தொன்களுடன் நேற்று புதன்கிழமை (20) காலை 9.31க்கு ஏவப்பட்டிருந்தது. 19 நிமிடங்களில் பி.எஸ்.எல்.வியிலிருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ பிரிந்திருந்தது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டபின்னர் செய்மதியின் சூரியக்கலங்கள் இயக்க வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, விரைவில், மேலதிகமாக இரண்டு இடஞ்சுட்டல் செய்மதிகள் ஏவப்பட்டு, இந்தியப் பிராந்திய இடஞ்சுட்டல் செய்மதி அமைப்பு, முழுமையாக இயங்கும் அமைப்பாக மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மேற்படி திட்டத்தில், இரண்டு செய்மதிகள், மாற்று செய்மதிகளாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் முழுமையாக இயங்க ஆரம்பித்தவுடன், இந்தியா மற்றும் பிராந்தியத்தில் துல்லியமான இடஞ்சுட்டல் சேவையை வழங்கும் என்பதுடன், 1,500 கிலோமீற்றர் வரையில் இதன் எல்லை இருக்கும் என்பதுடன், மேற்படி அமைப்பு, பாதுகாப்பு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகவுள்ளது.

அமெரிக்காவின் 24 செய்மதிகளை உள்ளடக்கிய ஜி.பி.எஸ் தவிர, ரஷ்யாவின் குளோனஸ் என்பனவே முழுமையாக இயங்குவதோடு, சீனாவின் பெய்டோ மற்றும் ஜப்பானின் அமைப்புகள் பிராந்தியத்தில் மாத்திரம் இயங்குவதுடன், ஐரோப்பாவின் கலிலியோ, இன்னும் இயங்குநிலையை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .