2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

அர்த்தமற்ற மொழியில் பேசும் மென்பொருள் கிளி

Editorial   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்களின் ஆக்கத்திறன் குறித்து மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பும் கொண்டிருப்பவர்கள் எமிலி பெண்டர் (Emily Bender) உடன் அறிமுகமாவது அவசியம். மொழியியல் பேராசிரியரான பெண்டர், சாட்ஜிபிடியின் ஆற்றல் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர். பெரும்பாலனோர் சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களின் ஆக்கத்திறனில் அதிசயித்து போயிருக்கும் நிலையில், இந்த ஏஐ மென்பொருள்கள் உண்மையில் அர்த்தமில்லா ஆக்கங்களை உருவாக்கும் தன்மை கொண்டவை என வலியுறுத்தி வருகிறார்.

சாட்ஜிபிடி தொடர்பாக பெண்டர் முன்வைக்கும் வாதங்களை பார்ப்பதற்கு முன், டேனியலா அமோடி (Daniela Amodei) சொல்லும் கருத்தையும் அறிந்து கொள்வது அவசியம். ”ஏதேனும் ஒருவிதமான மாயத்தன்மையை கொண்டிராத மொழி மாதிரி இருப்பதாக நினைக்கவில்லை” என்கிறார் அமோடி.

நாம் ஏற்கனவே பார்த்த, சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களின் இல்லாததை இருப்பதாக கூறும் மாயத்தோற்றம் (Hallucination) விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சாட்ஜிபிடிக்கு போட்டியாக கருதப்படும் கிளாட் 2 (Claude 2) சாட்பாட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஐ சாட்பாட்கள், அடுத்த வார்த்தையை யூகிக்கும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டதால், இதை மொழி மாதிரிகள் பிழையாக செய்யும் ஏதேனும் தருணங்கள் இருக்கவே செய்யும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த குறைகளை சரி செய்து, ஏஐ சாட்பாட்களை இயக்கும் மொழி மாதிரி நுட்பத்தை மேலும் உண்மை சார்ந்ததாக உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஏஐ நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

ஆனால் இது நடக்காத கதை என்கிறார் எமிலி பெண்டர்.

ஏஐ சாட்பாட் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான உள்ளார்ந்த பொருத்தமின்மையால் உண்டாகும் பிழை இது என்கிறார். மொழி மாதிரிகளை மேம்படுத்துவது எந்த விதத்திலும் இவற்றின் அடிப்படை பிழையை சரி செய்யாது என பெண்டர் நம்புகிறார்.

மொழி மாதிரிகள் என்பவை, பயிற்சி அளிக்கப்பட்ட வார்த்தை தரவுகள் கொண்டு வார்த்தைகளின் வெவ்வேறு தொகுப்பின் சாத்தியக்கூற்றை கணிப்பவை என்று விளக்கம் தருபவர் இலக்கு மொழியின் தன்மைக்கேற்ப, வழக்கமான எழுத்து வடிவம் போல, தங்கள் ஆக்கத்தை சாட்பாட்கள் தோன்றச்செய்கின்றன என்கிறார். வார்த்தைகளை கணித்து அவற்றை இட்டு நிரப்பும் ’ஆட்டோ கம்ப்ளீட்’ உத்தி போன்றது தான் இது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .