Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூன் 16 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிளின் இந்த வருடத்துக்கான உலகளாவிய ரீதியிலான உருவாக்குநர் மாநாடானது, அப்பிளின் சாதனங்களை இலகுவாக்கும் பொருட்டான, அப்பிளின் மக், ஐபோன், வோச், டி.வி ஆகிவற்றுக்கான பாரிய இற்றைப்படுத்தல்களுடன் அமைந்திருந்ததுடன், சிரி, ஐமெசேஜ் போன்ற சேவைகள், மூன்றாந்தரப்பு உருவாக்குநர்களுக்காக திறந்து விடப்பட்டிருந்தது.
இதில், குறிப்பிடத்தக்கதாக, சிரியானது தற்போது டெக்ஸ்டொப்புக்கு வந்துள்ளதுடன், அப்பிள் பே ஆனது, இனி, அப்பிளின் இணைய உலாவியான சபாரியிலும் இயங்கவுள்ளது. இது தவிர, ஐபோனானது பூட்டப்பட்ட திரையில் இருக்கின்ற போதே புதிய அறிவுறுத்தல்கள் கிடைக்கவுள்ளதோடு, அப்பிள் வோச்சானது, முன்னரை விட வேகமாக இயங்கவுள்ளதுடன், புதிய கட்டளை நிலையத்தை கொண்டமையவுள்ளதுடன் அப்பிள் மியூசிக், நியூஸ், மப்ஸ், போட்டோஸிலும் மாற்றங்கள் வந்துள்ளன.
ஒ.எஸ் எக்ஸ் என இதுவரை அழைக்கப்பட்டது, இனி மக் ஒ.எஸ் என அழைக்கப்படவுள்ளதுடன், இதன், தற்போதைய பதிப்பானது சியர்ரா என்றழைக்கப்படவுள்ளது. இதன் சோதனை, ஆரம்பக் கட்ட பதிப்பானது அடுத்த மாதம் பொதுவெளிக்கு வாரவுள்ளதுடன், இதன் இறுதிப்படுத்தப்பட்ட பதிப்பானது அதற்கடுத்த மாதங்களில் வரவுள்ளது.
மேற்கூறப்பட்ட சியர்ரா பதிப்பில் காணப்படுகின்ற யுனிவேர்சல் கிளிப்போர்ட் என்ற வசதியின் மூலம், ஏனைய அப்பிள் சாதனங்களான ஐபோன், வோச், ஐபாட் போன்றவற்றிலிருந்து பிரதியீடு செய்து, மக்கில் சேமித்துக் கொள்ள முடியும். தவிர, உங்களுடைய மக் டெஸ்க்டொப்பை ஐகிளவுட்டில் சேமித்து விட்டு, ஐகிளவுட் ட்ரைவ்வை பயன்படுத்துவதன் மூலம், அதை வேறு கணினிகளிலிருந்து கையாள முடியும். தவிர, சேமிப்பகத்தை அதிகரிக்கும் வழிமுறையாக, பழைய கோப்புக்களை கிளவுட்டுக்கு மாற்றும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, முக்கிய இற்றைப்படுத்தலாக, சியர்ராவில், டெஸ்க்டொப்புக்கு சிரி வருகின்றது. சிரி ஆனது டொக்கில் காணப்படுவதுடன், ஸ்பொட் லைட்டுக்கு அருகில் வலது பக்க மேல் மூலையிலும் காணப்படவுள்ளது. சிரியின் மூலமான குரல் வழி கட்டளைகள் மூலமாக கோப்புக்களை தேட முடியும் என்பதுடன், இணையத்தில் தேடுதல்களை மேற்கொள்ளவும் தகவல்களை அனுப்பவும், ஏனைய சாதாரண சிரி செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அப்பிளின் கைக்கடிகார இயங்கு தளமும், பல்வேறான இற்றைப்படுத்தல்களுடன் வோச் ஒ.எஸ் ஆக வெளிவந்துள்ளது. புதிய இயங்கு தளமானது முன்னைய இயங்குதளத்தை விட ஏழு மடங்கு வேகமாக இயங்கவுள்ளது. தவிர, இடஞ்சுட்டலானது இலகுவாக அமையவுள்ளது. புதிய கட்டளை நிலையத்தின் மூலம் விரைவாக கட்டளைகள் செயற்படுத்தப்படுவதால், வோச் ஆனது ஐபோன் போன்றே இயங்கவுள்ளது.
இது தவிர வோச்சானது, மிக்கி மௌஸ் உள்ளிட்டதான பின்னணியில் வரவுள்ளதுடன், சுவாசப் பயிற்சி, தியானம் ஆகிவற்றில் ஈடுபடும் செயலிகள் உள்ளடங்கலாக, பல புதிய உடற்கூற்று செயலிகளைக் கொண்டமையவுள்ளதுடன், அவற்றினை நண்பர்களுடன் பகிரக்கூடிய வகையிலும் உள்ளது.
இந்நிலையில், பிரதானமான, ஐபோனின் ஐ.ஒ.எஸ் ஆனது, இதுவரையில் இல்லாத வெளியீடு என்றவாறு வர்ணிக்கப்படுமளவுக்கான இற்றைப்படுத்தல்களை கொண்டமைந்துள்ளது. இதில், மியூசிக், மப்ஸ் ஆகியன முழுமையாக மீள வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், றெய்ஸ் அன்ட் வேக் என்ற புதிய வசதியின் மூலம், நீங்கள் அலைபேசியைத் தூக்கும்போது, தானாகவே, மூடப்பட்ட திரையானது செயற்பாட்டுக்கு வரும்.
அப்பிள் நியூஸில் தற்போது 2,000க்கு மேற்பட்ட வெளியீடுகளும் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மாதாந்த வாசிப்பர்வர்களும் இருக்கையில், புதிய இற்றைப்படுத்தலில், பிரதான செய்திகள், தற்போது பிரபலமாக இருக்கின்ற செய்திகள், விளையாட்டு ஆகிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதோடு, மூடப்பட்ட திரையிலிருக்கும் போதே, சூடான செய்திகளின் குறிப்புகள் திறக்கு வரவுள்ளன.
இதேவேளை, ஒரு வருடத்துக்கு பின்னர், முழுமையாக மாற்றத்துக்குள்ளாகியுள்ள அப்பிள் மியூசிக்கை இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளதுடன், தரவிறக்கப்பட்ட மியூசிக்கானது தனியொரு பகுதியாகவும் அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள், அல்பங்கள் தனியொரு தொகுதியாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில், மீள வடிவமைக்கப்பட்ட மப்பின் மூலம் சவாரிகளுக்கான முற்பதிவை மப்பின் மூலமே மேற்கொள்ள முடியும் என்பதோடு, அதற்கான பணத்தினை அப்பிள் பே மூலம் செலுத்த முடியும் என்பதோடு இடஞ்சுட்டலும் இலகுவாக்கப்பட்டுள்ளது.
அடுத்து, முக்கியமானதொரு மாற்றமாக, அப்பிளின் ஐமெசேஜ் ஆனது பாரிய இமோஜிகளைக் கொண்டமையவுள்ளதுடன், விசேடமான தருணங்களில், திரை முழுவதும் பலூன்கள் பறக்க விடப்படுவது போன்றோ, றொக்கெட்கள் ஏவப்படுவது போன்றோ செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், பேஸ்புக்கின் மெசஞ்சர், வட்ஸ்அப்புடன் ஐமெசேஜ் போட்டியிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, முக அடையாளத்தை பயன்படுத்தி, தானாகவே புகைப்படங்கள் ஒழுங்கமைக்கப்படும் வசதியும் இருப்பதுடன், புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள், நிகழ்வுகளை வைத்தும் தானாகவே ஒழுங்கமைக்கப்படும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வருடத்துக்கு குறைவான காலத்தையே கொண்டிருக்கின்ற அப்பிளின் டி.வி இயங்குதளமானது 1,3000 காணொளி அலைவரிசைகளையும் 6,000க்கு மேற்பட்ட செயலிகளையும் கொண்டிருக்கையில், இதில், சிரி குரல் கட்டுப்பாட்டினால் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி, சிரியினைப் பயன்படுத்தி, இதில் தேடுதல்களை மேற்கொள்ள முடியும்.
இவற்றினை விட, கணினி நிரல் செயலிகளை சிறுவர்கள் இலகுவாக அறிந்து கொள்வதற்காக சுவிவ்ட் பிளேகிரவுண்ட்ஸ் எனும் செயலி ஐபாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், உங்களுடைய வீட்டிலுள்ள சாதனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஹோம் கிட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு பில்லியனுக்கு மேற்பட்ட அழைப்புக்களை தற்போது பெறுகின்ற சிரி சேவையானது, மூன்றாந்தரப்பு உருவாக்குநர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ள நிலையில், இனிமேல் சிரியினைப் பயன்படுத்துவதன் மூலம் வீசட்டில் தகவல் அனுப்ப முடியுமென்பதுடன், ஊபரை அழைக்குமாறு கோர முடியுமென்பதுடன் பின்ரஸ்ட்டில் புகைப்படங்களை தேடவும் முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
4 hours ago
5 hours ago