2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

Yarl Geek Challenge வெற்றியாளரானது வவுனியா ம.ம வித்தியாலயம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

Yarl IT Hub அமைப்பால் கடந்த வெள்ளிக்கிழமை (16), சனிக்கிழமைகளில் (17) இடம்பெற்ற Yarl Geek Challenge இன் நான்காம் பருவகாலத்தின் வெற்றியாளராக வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தின் அணி ஒன்று தெரிவானது.

வெற்றி பெற்ற வவுனியா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் Arduino வன்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதவொன்றில் கையால் தட்டும் கோலத்தின் மூலம் கதவொன்றை எவ்வாறு திறப்பது என்பது பற்றிய வன்பொருள் அமைப்பைத் தயாரித்திருந்தனர்.

இவர்கள் தவிர, ஏற்கனவே கூறப்பட்டிருந்தது போன்று சிறந்த திறன்பேசி செயலியை உருவாக்கிய அணி, சிறந்த இணையத்தள வடிவமைப்பு, சிறந்த வன்பொருள் தீர்வு என தனித்தனி பிரிவுகளிலும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அவ்வகையில், பஸ் மிதி பலகையில் பயணி ஒருவர் நிற்கும்போது பஸ்ஸின் சாரதிக்கு சிவப்பு சமிஞ்ஞையும், அப்பயணி இரண்டாவது மிதிபடியைத் தாண்டும்போது மஞ்சள் சமிஞ்ஞையும், மூன்றாவது மிதிபடியைத் தாண்டியபின் பச்சை சமிஞ்ஞையும் காட்டும் வகையிலும், ஒவ்வொரு பயணி பஸ்ஸுக்குள் உட்செல்லும்போதும் கணக்கெடுக்கக் கூடிய வகையிலும் வன்பொருள் தீர்வை வடிவமைத்த காரைநகர் கலாதிநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அணியொன்று சிறந்த வன்பொருள் தீர்வு வடிவமைப்பாளர்களாக தெரிவாகியிருந்தது.

தவிர, மாணவர் ஒருவர் பாடசாலைக்கு சமூகமளிக்காவிடின் குறிப்பிட்ட மாணவரின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி கிடைக்கைக் கூடிய வகையிலான திறன்பேசி செயலியை வடிவமைத்திருந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையின் அணியொன்று சிறந்த திறன்பேசி செயலி வடிவமைப்பாளர்களாகத் தெரிவாகியிருந்தது.

சிறந்த இணையத்தள வடிவமைப்பாளர்களாக, தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்க்கு உதவி புரியும் பொருட்டு இணையத்தளத்தை வடிவமைத்த வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் Bloom Buds அணி தெரிவாகியது.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட, மிகவும் பின்தங்கிய பிரதேசப் பாடசாலையாக இருந்தும் பங்குபற்றிய அணிகளுக்கு கடும் போட்டியை வழங்கிய பாண்டியன்குளம் மகா வித்தியாலய அணி விசேட பாராட்டையும் பெற்றுக்கொண்டது.

வடமாகாணத் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து இம்முறை நடாத்தப்பட்ட ஜூனியர் பிரிவுப் போட்டிகளில் வடமாகாணத்திலுள்ள 12 கல்வி நிலையங்களிருந்தும் பல பாடசாலைகளிருந்து அணிகள் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு 31 அணிகள் தெரிவாகியிருந்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கான பெறுமதி வாய்ந்த பரிசில்கள் எதிர்வரும் 6,7,8 ஆம் திகதி இடம்பெறவுள்ள சீனியர் பிரிவுப் போட்டிகளின்போது வழங்கப்படவுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .