2024 நவம்பர் 02, சனிக்கிழமை

Yarl Geek Challenge சீனியர் நாளை ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 05 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

Yarl IT Hubஇனால் நடாத்தப்படும் Yarl Geek Challenge இன் சீனியர் பிரிவுப் போட்டிகளின் நான்காவது பருவகாலப் போட்டிகள், யாழ்ப்பாணம், நல்லூர், நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகிகள் அறக்கொடை நிலைய மண்டபத்தில் (TCT Hall) நாளை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இந்தப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை பூராவிமிலிருந்து 40 அணிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த 40 அணிகளுக்கும் 25 வினாக்கள் கொண்ட வினாக்கொத்து ஒன்று அனுப்பப்பட்டு அவர்களின் பதில்கள் பெறப்பட்டு அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 அணிகள் நாளை ஆரம்பமாகி மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள முதல்சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுகின்றன.  

நாளை இடம்பெறும் முதல் நாள் போட்டிகளில் போது, பங்குபற்றுகின்ற அணிகள், தமது வழிகாட்டுநர்களுடன் இணைந்து தமது தயாரிப்புக்களை மேம்படுத்தி மாலை 3 மணியளவில் தமது தயாரிப்புக்கள் எந்தளவில் இருக்கின்றன என்ற உத்தியோகபூர்வமற்ற அறிக்கையை நடுவர்களுக்கு வழங்கவுள்ளன. அதனைத் தொடர்ந்து முதல்நாள் மாலை 6 மணியளவில் நிறைவுக்கு வரும்.

சனிக்கிழமை (07) இடம்பெறும் இரண்டாம் நாள் நிகழ்வுகளும் தியாகிகள் அறக்கொடை நிலைய மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், காலை 9.30 மணி முதல் Lankan Angel Network நிறுவனத்தின் அணியானது முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஒவ்வொரு அணியுடனும் கலந்துரையாடலை ஆரம்பிக்கும். தொடர்ந்து மாலை 3 மணியளவில் வழமை போன்று ஒவ்வொரு அணிகளும் தத்தமது தயாரிப்புக்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது பற்றி நடுவர்களுக்கு அறிக்கையளிக்கும். தொடர்ந்து மாலை 3 மணியளவில் இரண்டாம் நாள் போட்டிகள் நிறைவுக்கு வரும்.

இறுதி, மூன்றாம் நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 9 மணிக்கு யாழ். நகரில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கவுள்ளது. தொடர்ந்து காலை 10 மணி முதல் ஒவ்வொரு அணியும் இறுதி செயல்முறை விளக்கம், அளிக்கைகளை நடுவர்கள் முன் நிகழ்த்தவுள்ளன.

நடுவர்களின் மதீப்பீடு முடிவடைந்தவுடன் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவின் போது, ஜூனியர் பிரிவுப் போட்டிகளில் வெற்றியடைந்த பாடசாலை அணிகளுக்கு பெறுமதியான பல பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இதனையடுத்து இந்த முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவில் தெரிவாகும், ஐந்து அல்லது ஆறு அணிகள், கொழும்பு யூனியன் பிளேசில் அமைந்துள்ள டயலொக் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளன. 

இந்த Yarl Geek Challenge சீனியர் போட்டிகளின் மூலமாக, பங்குபற்றும் சிறந்த இளம் வயதினர், உலகின் மிகக் கடினமான பிரச்சினைகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்க்கவும் தமது தகவல் தொழில்நுட்ப, புத்தாக்க, படைப்பாற்றல் திறன்களை வளர்த்தெடுக்கவும், பங்குபற்றுபவர்களிடையே தொழில் முயற்சியாண்மை ஊக்குவிக்கவும் முடிக்கின்ற அதேவளை இந்தப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் தொழில் துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைப்பதுடன், தொழிற்துறையில் பெறுமதியான அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. தவிர, தமது திறமைகளை தகவல் தொழில்நுட்ப உலகுக்கு வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புக் கிடைப்பதுடன், தமது எண்ணங்களை நிஜமாக்கிக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .