2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

எரிகல்லுக்கு மலலாவின் பெயர்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் பெண் கல்விக்காகப் போராடி,தலிபான்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில்  உயிர் பிழைத்த, நோபல் பரிசு பெற்ற மலலாவின் பெயரை எரிகல் ஒன்றுக்கு நாசா விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியான மலலா, 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தலிபான் போராளிகளினால் சுடப்பட்டார். பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால், பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த மலலாவை தலிபான்கள் சுட்டனர்.

படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய மலலா, சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பூரண குணம் அடைந்த மலலா, தற்போது அங்குள்ள பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில், விண்ணில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட '316201' என்ற எரிகல்லுக்கு மலலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக் கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'எரிகல்லுக்கு மலலாவின் பெயரைச்சூட்டியிருப்பது மிகுந்த மரியாதைக்குரியதாகும். ஏற்கெனவே எத்தனையோ எரிகற்களுக்கு பெயர் சூட்டியிருந்தாலும் பெண்களின் பெயர்களை சூட்டியதில்லை என்பதை எனது சக விஞ்ஞானி டாக்டர் கேரி நியூஜென்ட் நினைவுபடுத்தினார்.

அதைத் தொடர்ந்தே செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையே நான் கண்டுபிடித்துள்ள எரி கல்லுக்கு மலலாவின் பெயரை சூட்டியுள்ளேன். இந்த எரிகல், சூரியனை 5.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும் என்றார்.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என குரல் கொடுக்கும் மலலா, பாகிஸ்தானின் முதல் அமைதிப்பரிசு, உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின் தைரியத்துக்கான விருது, 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு என பல விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .