2024 நவம்பர் 02, சனிக்கிழமை

Yarl IT Hubஇன் Yarl Geek Challenge வெற்றியாளராக முடிசூடியது Bitmasters

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முருகவேல் சண்முகன்

யாழ்ப்பாணத்தினை அடுத்த சிலிக்கன் பள்ளதாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான Yarl IT Hubஆனது வெற்றிகரமாக தனது நான்காவது பருவகால Yarl Geek Challengeஇனை நிறைவு செய்துள்ளது.

ஆரம்பத்தில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஒரு கலந்துரையாடலாக  ஆரம்பிக்கப்பட்ட Yarl IT Hubஆனது, அதன் பின் புதிய தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து Yarl Geek Challenge எனும் போட்டியை 2012ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது.

தொடர்ந்த Yarl Geek Challengeஇன் இரண்டாம்  பருவ காலத்தில் ஜீனியர், சீனியர் என்ற பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றதுடன், அதனையடுத்து இடம்பெற்ற மூன்றாவது பருவகாலத்தில் இன்னொரு படியை எடுத்து வைத்த Yarl IT Hub நிறுவனமானது, அந்தப் பருவகாலத்தில் வெற்றி பெற்ற, இறுதிச் சுற்றுகளுக்கு வந்த அணிகள், தாமே தனித்து நிறுவனங்களை அமைக்கும் பொருட்டு முதலீடுகளை பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

தவிர, தற்போது பாடசாலைகள் பழைய கோப்பு முறையிலேயே தமது தரவுகளை பேணி முகாமைத்துவம் செய்து இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகையில், இதனைத் தீர்க்கும் பொருட்டு  ySchool எனும் பாடசாலை முகாமைத்துவ திட்டம் ஒன்றிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், Yarl Geek Challenge இன் நான்காவது பருவகாலமானது, கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்து, கடந்த சனிக்கிழமை (28) நிறைவுக்கு வந்திருந்தது.

இதில், ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜூனியர் பிரிவுப் போட்டிகளானது, இம்முறை வடமாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து, முதற்கட்டமாக வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களுக்குமான மதிப்பீடுகள் ஐந்து நிலையங்களில் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து, இதன் இறுதிப் போட்டிகள், ஒக்டோபர் 16ஆம், 17ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.

இதில் வெற்றியாளராக, கையால் தட்டும் கோலமொன்றின் மூலம் கதவை எவ்வாறு திறப்பது என்பது தொடர்பான வன்பொருள் அமைப்பை தயாரித்திருந்த வவுனியா மத்திய மகா வித்தியாலய அணி தெரிவாகியிருந்தது. அடுத்து, பஸ் ஒன்றின் மிதிபலகையை பயணி ஒருவர் தாண்டும்போது சாரதிக்கு அறிவுறுத்தல் கிடைக்கப் பெறும் வன்பொருள் அமைப்பை தயாரித்த காரைநகர் கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் சிறந்த வன்பொருள் தீர்வாக தெரிவாகியதோடு, மாணவர் ஒருவர் வராமையைப் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கும் திறன்பேசிச் செயலியை உருவாக்கிய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையானது சிறந்த திறன்பேசி செயலி வடிவமைப்பாளர்களாகவும் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு இணையத்தளத்தை வடிவமைத்திருந்த யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் Bloom Buds அணி சிறந்த இணையத்தள வடிவமைப்பாலர்களாக தெரிவாகியிருந்தது.

இந்நிலையில், சீனியர் பிரிவுக்கான போட்டிகளுக்கான போட்டிகளுக்கு 39 அணிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த அணிகளுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு, அவற்றில் இருந்து தெரிவான, 18 அணிகள் யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 6, 7, 8ஆம் திகதிகளில் இடம்பெற்ற முதல் சுற்றில் பங்குபற்றி அதிலிருந்து SiRa, Bitmasters, Gideons, Arima, LOSERs, Titans ஆறு அணிகள் இதில் தெரிவாகியிருந்தன.

இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டியில் AMPLUS எனப்படும் நுண்ணறிவு மிக்க டிஜிட்டல் விளம்பரப் பலகையை தயாரித்திருந்த லக்மால் புத்திக, சானக லக்மால், தினுக சலாவதுர, மாதவ விதான பத்திரண, சதுஷா விஜேநாயக்கா ஆகியோரைக் கொண்ட Bitmasters அணியானது Yarl Geek Challengeஇன் நான்காவது பருவகாலத்தின் வெற்றியாளர்களாக தெரிவாகியிருந்தது.

இரண்டாமிடத்தை, இலங்கையிலுள்ள ஒவ்வொரு பஸ்களும் எங்கு பயணிக்கின்றன என்பதை கண்டறிவதற்கான “Find my Bus” எனும் செயலியை வடிவமைத்திருந்த கே.ஜெ.டி திமுது லக்மால், கீத் மலின் சுகததாஸ, புத்தி ஆயிஷா ரத்நாயக்கா ஆகியோரைக் கொண்ட Titans பெற்றிருந்தது.

மூன்றாமிடத்தை, பிரதானமாக தமிழால் பேசுவதை சிங்களமாக மாற்றுவதையும் வேறு மொழிபெயர்ப்புக்களையும் கொண்ட அன்ட்ரொயிட் செயலியை வடிவமைத்திருந்த ஆர்.லயன்சன், எஸ்.சர்மிலன், எஸ்.அரவிந், சி.பானுஜன், எஸ்.பபித்ரா ஆகியோரைக் கொண்ட Gideons  அணி பெற்றது.

மேற்படி மூன்று அணிகளைத் தவிர இறுதிக்கு வந்த, ஒரே பின்னணியைக் கொண்ட புகைப்படத்தை இணைத்து ஒப்பீட்டு காட்டுவதற்குரிய Timeogaph அன்ரொயிட் செயலியை வடிவமைத்த, தீபிகா பாஸ்கரன், வினுஜன் சங்கரப்பிள்ளை, கே.செந்தாளன் ஆகியோரைக் கொண்டிருந்த Arima அணி, வீட்டிலுள்ள ஒவ்வொரு மின்சாதனங்களும் எவ்வளவு மின்னை நுகருகின்றன என்பதை கண்காணிக்கும் செயலியை வடிவமைத்திருந்த எஸ். குருபரன், யு.கீர்த்தனன், ஆர்.ஜதுஸன், ரூபிஷா ரூபநாதன் ஆகியோரைக் கொண்ட Losers அணி, வரும் குறுஞ்செய்திகளுக்கு தன்னியக்கமாகவே நிலமைகளைப் புரிந்து மீள குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை வடிவமைத்திருந்த இஷான் மதுஷங்க, நாலக ரஜமந்திரி, சமுதி கருணாரத்ன, ராஜித ராமாநாயக்கா, விமுக்தி பெரேரா ஆகியோரைக் கொண்ட SiRA அணி போன்றவற்றுக்கும் முதலீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .