2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொன்னியின் செல்வன் பிரம்மாண்டத்தை மணிரத்னம் சாதித்தது எப்படி?

Editorial   / 2022 செப்டெம்பர் 30 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

படிக்கத்தொடங்கிவிட்டால் முடிக்காமல் விடமுடியாது என பல புத்தகங்கள் இருக்கும். அப்படியான புத்தகங்களில் ஒன்றுதான் பொன்னியின் செல்வன். கொஞ்சம் உண்மையும் அதிகம் புனைவும் கொண்ட பொன்னியின் செல்வனை அனேகமானவர்கள் படித்திருப்பார்கள். பரபரவென கதை ஓடிக்கொண்டிருக்க கண்முன்னே கதையெல்லாம் காட்சியாக விரியும். இப்படியான அனுபவம்தான் அனைவருக்குமே இருக்கும். அதனால்தான் இந்த நாவலை திரைப்படமாக எடுக்கவும் பல தலைகள் ஆசைப்பட்டன.

திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருந்த எம்ஜிஆரிடம் தொடங்கிய ஆசை கமல், ரஜினி என தொடர்ந்துகொண்டே வந்தது. பல கதாபாத்திரங்கள் இந்த நாவலில் இருப்பதால் பல நடிகர்கள் தனக்கு ஏற்ற கேரக்டரை மனதில் விதைத்து ஆசை வளர்த்தும் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த மகா சம்பவம் நடந்தது 2022ல்தான். பல ஆண்டுகால கனவை இன்று முடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

பட அறிவிப்பு தொடங்கியதில் இருந்து நிகழ்கால ட்ரெண்டிங்கிலேயே இருந்தது பொன்னியின் செல்வன். மணிரத்னத்தைச் சுற்றி ஒரு வித அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது. பலரும் தான்படித்த தன் கற்பனையில் உருவான கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுக்கப்போகும் நடிகர்கள் யார் என்ற ஆர்வத்திலேயே இருந்தனர்.

வந்தியத்தேவன் யாராக இருக்கும்? குந்தவை யார்? நந்தினி யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஒவ்வொரு கேரக்டரையும் வெளியிட்டார் மணி ரத்னம். கலவையான விமர்சனங்களுக்கு நடுவே எரிந்துகொண்டிருந்தது சோஷியல் மீடியா. ஆனால் எதையுமே காதில் வாங்காமல் ஷூட்டிங்கை தொடங்கினார் இயக்குநர்.

நாவல் படித்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமென்ற அழுத்தம் ஒருபுறம் என்றால் மறுபுறம் பான் இந்தியா. தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், கன்னடத்தில் கேஜிஎப் என இந்தியாவையே தென்னிந்திய திரைப்படங்கள் ஆட்சி செய்யும்போதெல்லாம் அனைவரின் பார்வையும் தமிழ் சினிமா மீது விழுந்தது. சினிமாவில் நூற்றாண்டை கடந்த கோலிவுட்டில் காலரைத்தூக்கும் அளவுக்கு ஒரு படம் வரவில்லை என ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருந்த நேரத்தில்தான் பொன்னியின் செல்வன் அறிவிப்பும் வந்தது. வந்ததுதான் தாமதம், இது பாகுபலி அளவுக்கு இருக்குமா? பாகுபலியை மிஞ்சுமா என்றெல்லாம் இணையத்தில் விவாதம் தொடங்கின. அத்தனை அழுத்தங்களுக்கு நடுவேதான் தன் பணியை தற்போது சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் மணி ரத்னம்.

இன்று..

இன்று பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நாவல் படித்தவர்களுக்கும், நாவல் படிக்காதவர்களுக்கும் என அனைத்து தரப்பின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறது. ஒரு நாவலை வரிக்கு வரி காட்சிப்படுத்த முடியாது என்றாலும் முடிந்தவரை அதன் சுவாரஸ்ய சாராம்சம் குறையாமல் காட்சிப்படுத்திவிட வேண்டும். அந்த பரீட்சையில் பாஸ் ஆகிவிட்டார் மணிரத்னம்.

ஆடை, அணிகலன்கள், இடம் தேர்வு என அனைத்திலேயுமே குறையில்லாமல் முதல் பாகத்தை முடித்து வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த வெற்றியில் பெரிதும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம், ஷூட்டிங் நாட்கள். வெறும் 150 நாட்களில் இந்த படத்தை ஷூட் செய்து முடித்திருக்கிறார் இயக்குநர். கிட்டத்தட்ட 5 மாதங்களில் இவ்வளவு பெரிய ப்ராஜக்ட் முடிந்தது எனக்கேட்டதும் பாகுபலி இயக்குநரே இருக்கையில்  இருந்து துள்ளிக்குதித்து எழுந்து ஷாக் ஆகியுள்ளார். உள்ளதுபடியே இது ஷாக் ஆகவேண்டிய விஷயம்தான். இது சாத்தியமானதற்கு முக்கிய காரணம் பக்கா ப்ளான். குறிப்பாக தெளிவான திரைக்கதை.

அன்றே சொன்ன சுஜாதா..

பொன்னியின் செல்வனை திரையில் படமாக்குவதில் மிக கடினம். மணிரத்னம் திரைக்கதை வைத்திருக்கிறார். எப்போதாவது அதனை படமெடுப்பார் என்று அப்போதே சொல்லி வைத்தார் எழுத்தாளர் சுஜாதா. இதில் கவனிக்க வேண்டியது இதைத்தான். இந்த நாவலுக்கான திரைக்கதை ஏதோ பாகுபலி பார்த்த ஆர்வத்தினால் வந்தது அல்ல. அது என்றோ போட்டுவைக்கப்பட்ட விதை. மெறுகேற்றி மெறுகேற்றி தயாராக இருந்த திரைக்கதை. வாய்ப்பு கிடைத்ததும் தட்டித்தூக்கிவிட்டார் மணிரத்னம்.

பல வருடங்களாக மனதில் பதிந்த திரைக்கதை, தயாராகவே இருந்த திட்டங்கள் என அனைத்தும் விரல் நுனியில் இருந்ததால் பரபரவென காட்சிகளை எடுத்து 150 நாட்களில் முடித்திருக்கிறார் மணி ரத்னம். இரண்டாம் பாகமும் அதே வேகத்தில் ரிலீஸாகும் என்பதையும் அவர் ஏற்கெனவே கூறிவிட்டார். பல அழுத்தங்களுக்கு நடுவே படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்திருக்கும் இயக்குநர், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துவிட்டார். இதற்கிடையே சரியான திட்டமிடல் இருந்தால் பெரிய பட்ஜெட் படங்களையும் அரை வருடத்துக்குள் முடித்துவிடலாம் என்று சொல்லாமல் சொல்லி மாஸ் காட்டியிருக்கிறார் மணி ரத்னம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X