Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021-ல் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்ட படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுனின் மேனரிசம், சமந்தா தோன்றிய ‘ஊ சொல்றியா’ பாடல், செம்மர கடத்தல் பின்னணி, வில்லனாக ஃபஹத் ஃபாசில் என முதல் பாகத்தின் வெற்றிக்கு பல்வேறு காரணிகள் அடித்தளமாக அமைந்தன. தற்போது 3 ஆண்டுகள் கழித்து, முதல் பாகத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த அம்சங்கள் ஆங்காங்கே தூவப்பட்டு ‘Pushpa 2 The Rule’ ஆக வெளியாகியுள்ளது ‘புஷ்பா 2’.
முதல் பாகம் முடிந்த இடத்தில் இருந்தே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா). அதேவேளையில், புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்). ஆந்திர முதல்வரை சந்திக்க செல்லும் புஷ்பாவை, முதல்வருடன் ஒரு போட்டோ எடுத்து வரச் சொல்கிறார் ஸ்ரீவள்ளி. ஆனால் தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் புஷ்பா ஒரு கடத்தல்காரன் என்பதால் முதல்வர் (ஆடுகளம் நரேன்) மறுப்பு தெரிவிக்கின்றார். இதனால் கோபமடையும் புஷ்பா, தன்னுடைய நெருங்கிய நட்பில் இருக்கும் எம்.பி சித்தப்பாவை (ரமேஷ் ராவ்) முதல்வர் ஆக்குவதாக சபதம் ஏற்கிறார். அதன் பிறகு என்னவானது? புஷ்பாவின் சபதம் நிறைவேறியதா? ஷெகாவத்துக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான பகை தீர்ந்ததா என்பதே திரைக்கதை.
சாதாரண படமாக எடுக்கப்பட்டு நாடு முழுவதும் பார்க்கப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக மாறுவது ஒரு வகை என்றால், படத்தின் முதல் பூஜையின்போது பான் இந்தியா படமாக எடுக்க வேண்டும் என்று சபதம் ஏற்று எடுக்கப்படும் படங்கள் மற்றொரு வகை. இதில் ‘புஷ்பா’ இரண்டாவது வகை. ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் எல்லாம் அதன் கதாபாத்திர வடிவமைப்பு, நேர்த்தியான திரைக்கதை ஆகியவற்றால் பான் இந்தியா படமாக மாறியவை. ஆனால் ‘புஷ்பா’, ‘தேவரா’, ‘லைகர்’, தமிழில் ‘கங்குவா’ போன்ற படங்கள் பான் இந்தியா ஆடியன்ஸை குறிவைத்து எடுக்கப்பட்டவை. இதில் ‘புஷ்பா’ முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றி என்பது கூட ஒரு விபத்து என்றுதான் சொல்லவேண்டும். முதல் பாகம் வெளியானபோதே பயங்கர நெகட்டிவ் விமர்சனங்களும், கலாய்ப்புகளும் இணையத்தை ஆக்கிரமித்தன. ஆனாலும், அது ஒரு ‘பான் இந்தியா’ படம் என்று தொடர்ந்து நிறுவப்பட்டு எப்படியோ தப்பித்து விட்டது.
அப்படி தப்பித்த ஒரு படத்திலிருந்து ஹிட் ஆன அம்சங்களை மட்டுமே நைஸாக உருவி அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து இதிலும் ஆங்காங்கே சொருகி வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சுகுமார். முதல் பாகத்தை விட இப்படத்தின் புரொடக்ஷன் வேல்யூவுக்காக, படம் தொடங்கும்போதே புஷ்பராஜ் ஜப்பானில் எதிரிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான், சண்டை முடிந்தவுடன் அந்தக் காட்சியை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு படம் மீண்டும் ஆந்திராவுக்கே வந்துவிடுகிறது. ஹீரோ - வில்லன், ஹீரோ - ஹீரோ மனைவி இடையிலான காட்சிகளால் முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யமாகவே செல்கிறது. குறிப்பாக அல்லு அர்ஜுன் - ஃபஹத் இடையிலான கேட் அண்ட் மவுஸ் விளையாட்டு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. படத்தின் இடைவேளை வருமிடம் அதகளம்.
ஆனால், படம் இடைவேளைக்கு பிறகு திசைமாறி தொங்க ஆரம்பித்து விடுகிறது. முதல் பாதியில் சுவாரஸ்யமாக இருந்த அல்லு - ஃபஹத் இடையிலான காட்சிகள் கூட படுமொக்கையாக எழுதப்பட்டு வீரியம் இழந்து போகின்றன. புஷ்பா முந்தைய பாகத்தில் கூலித் தொழிலாளியாக இருந்த புஷ்பராஜ், படிப்படியாக எழுச்சி பெற்று புஷ்பராஜாக மாறும் காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். ஆனால், இப்படத்தில் புஷ்பா ஒரு சூப்பர் ஹ்யூமன் போல காட்டப்படுகிறார். அவருக்கு படத்தில் எந்த இடத்திலும் வீழ்ச்சியே இல்லை. அவரால் இஷ்டத்துக்கு பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்குவது போல ஒரு ஹெலிகாப்டரை வாங்கி, எந்த தடையும் இல்லாமல் பக்கத்து நாட்டுக்கு பறந்து செல்லமுடிகிறது.
இதே போலத்தான் முதல் பாதியில் வலுவான வில்லனாக எழுதப்பட்டிருந்த ஃபஹத் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் காமெடியன் போல மாறி நீர்த்துப் போய் விடுகிறது. ராஷ்மிகாவுக்கு முந்தைய பாகத்தை விட வலுவான கதாபாத்திரம். ஒரு பெண் தன் கணவனிடம் பாலியல் வேட்கையை வெளிப்படுத்துவதாக துணிச்சலாக காட்சி வைத்தது எல்லாம் சரிதான். ஆனால், அதை காட்சிப்படுத்திய விதம் சகிக்க முடியாததாக இருக்கிறது. நெளிய வைக்கும் காட்சிகள், வன்முறைகள் நிறைந்த இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது எப்படி என்பது புரியாத புதிர்.
படத்தின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கின்றன. தேவிஸ்ரீ பிரசாத் இல்லாத குறையை தமனும், சாம் சி.எஸ்-சும் தீர்த்து வைத்துள்ளனர். படம் முழுக்க பின்னணி இசை சிறப்பு. எனினும் சில காட்சிகளும் ‘கே.ஜி.எஃப்’ வாடை வீசுகிறது. முதல் பாகத்தில் ஒற்றைப் பாடலில் சமந்தா வசீகரித்த அளவுக்கு, இந்தப் படத்தில் ஸ்ரீலீலாவின் அந்த ஒற்றைப் பாடலும் காட்சிகளும் இல்லை என்பது இன்னொரு துயரம்.
சண்டைக் காட்சிகளில் லாஜிக் மீறல் என்று சொல்லமுடியாது, லாஜிக் மீறலில் தான் சண்டைக் காட்சிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். 90-களின் இறுதியில் வரும் சீன படங்களில் ரோப் கட்டிக் கொண்டு பறந்து பறந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போதும் இந்திய திரைப்படங்களில் ரோப் கட்டி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டாலும் அவை பெரிதாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை. ஆனால் 90-களின் சீன படங்களுக்கே சவால் விடும் வகையில் கால் தரையிலேயே படாதவாறு காற்றிலே ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறார் ஹீரோ. அதிலும் க்ளைமாக்ஸ் எல்லாம் பாலையா லெவலையை தூக்கிச் சாப்பிடும் ரகம். விட்டால் திரையை கிழித்துக் கொண்டே நம்முடைய கழுத்தையும் கவ்விவிடுவாறோ என்று கையை கழுத்தில் வைத்துக் கொண்டே பார்க்க வேண்டியிருந்தது.
படத்தின் நீளம் சுமார் 3.15 மணி நேரம். படத்தில் ஒரு காட்சியில் ஹீரோயின் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது கோயிலில் புடவையை கட்டிக் கொண்டு சுமார் ஒரு அரை மணி நேரம் ஆடுகிறார் ஹீரோ. அதனைத் தொடர்ந்து இன்னொரு அரை மணி நேரத்துக்கு சண்டைக் காட்சி வேறு. எதற்காக இந்தக் காட்சி என்று பார்த்தால், க்ளைமாக்ஸில் படமே கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இத்துடன் முடிச்சு போட்டு ஒரு மெகா சீரியல் போல குடும்ப சென்டிமென்ட்டை நுழைத்து இன்னொரு அரை மணி நேரம் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். இதில் ‘புஷ்பா’ மூன்றாம் பாகத்துக்கான லீட் வேறு.
முதல் பாகத்தில் வரும் பிரபலமான ஒரு வசனம் இந்தப் பாகத்திலும் வருகிறது. ‘புஷ்பான்னா ஃபிளவருன்னு நெனச்சியா, ஃபயரு’ என்று. ஆம், இந்த ஃபயர் மிக பரிதாபமாக பாதியிலேயே அணைந்து போய் விட்டதுதான் சோகம். (நன்றி: தி ஹிந்து)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago