Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87 ஆகும்.
சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் ஏப்ரல் 4 அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவை உறுதிப்படுத்தி திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் பண்டிட் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், “இன்றைய நாள் திரைத்துறைக்கு ஒரு துக்க நாள். இந்திய திரைத்துறையின் ஜாம்பவானை நாம் இழந்துவிட்டோம். நடிகர் மனோஜ் குமார் அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். சில காலமாகவே அவர் உடல்நலன் குன்றி படுக்கையிலேயே இருந்தார். இன்று அவர் நம்மைப் பிரிந்தார்.” என்று கூறினார்.
மனோஜ் குமார் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் (1937) பிறந்தவர். இயற்பெயர் ஹரிகிஷண் கிரி கோஸ்வாமி. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கிருந்து தப்பி வந்த இவரது குடும்பம், புதுடெல்லியில் குடியேறியது.
ஷப்னம்’ படத்தில் தனது அபிமான நடிகர் அசோக்குமாரின் கதாபாத்திரப் பெயரான ‘மனோஜ் குமார்’ என்பதை தன் திரைப்படப் பெயராக சூட்டிக் கொண்டார். ‘ஃபேஷன்’ என்ற திரைப்படம் மூலம் 1957-ல் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இது வெற்றிப்படம் இல்லை என்றாலும், இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ‘காஞ்ச் கீ குடியா’, ‘பியா மிலன் கி ஆஸ்’, மற்றும் ‘ரேஷ்மி ரூமல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
1962-ல் வெளியான ‘ஹரியாலி அவுர் ராஸ்தா’, இவரது முதலாவது ஹிட் படம். 1964-ல் வந்த ‘வோ கோன் தீ’ திரைப்படம் இவருக்கு இந்தி திரையுலகில் மிகப் பெரிய இடத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ‘ஹிமாலய் கீ கோத் மே’, ‘கும்நாம்’, ‘யாத்கார்’, ‘தோ பதன்’, ‘நீல் கமல்’, ‘ஷோர்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
முதன்முதலாக பகத்சிங் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘ஷஹீத்’ திரைப்படம், ‘தேசபக்தி ஹீரோ’ என்ற இமேஜை கொடுத்தது. இப்படத்துக்காக இவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருது பரிசுத் தொகை முழுவதையும் பகத்சிங் குடும்பத்துக்கு நன்கொடையாக கொடுத்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ‘பூரப் அவுர் பஸ்சிம்’, ‘க்ராந்தி’ உள்ளிட்ட பல தேசபக்திப் படங்கள் வெற்றிப் படைப்புகளாக இவரை புகழ்பெறவைத்தன. இதனால் ‘பாரத்குமார்’ என்று நேசத்துடன் அழைக்கப்பட்டார்.
1965 இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவரிடம் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற கோஷத்தின் அடிப்படையில் ஒரு திரைப்படம் தயாரிக்கச் சொன்னார். அதன்படி இவரது இயக்கத்தில் தயாரானதுதான் ‘உபகார்’ வெற்றிப்படம். அதில் இயக்குநராக அறிமுகமானார்.
பத்மஸ்ரீ, வாழ்நாள் சாதனைக்கான பால்கே ரத்னா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். ‘பேஇமான்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். ‘ரோட்டி கபடா அவுர் மக்கான்’ திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஃபிலிம்பேர் விருதுகளை பலமுறை பெற்றுள்ளார். இந்திய சினிமா வளர்ச்சியில் இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கு ‘தாதா சாஹேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
5 hours ago
8 hours ago