2025 மார்ச் 13, வியாழக்கிழமை

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு?

Freelancer   / 2025 மார்ச் 13 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சவுந்தர்யாவின் மரணத்தின் பின்னணியில், நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்புள்ளதா ? என விசாரணை நடத்த கோரி தெலங்கானா மாநிலம் கம்மம் காவல் துணை ஆய்வாளரிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தென்னிந்திய திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. குடும்பப்பாங்கான நடிகை என இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. தமிழில் நடிகர் கார்த்திக்குடன் இவர் நடித்த பொன்னுமணி படத்தை தொடர்ந்து இவர் அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, சொக்கத்தங்கம் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்து புகழ் பெற்றார்.

இதேபோன்று தெலுங்கிலும் இவர் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் 2003-ம் ஆண்டில் உறவினர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், கடந்த 17.4.2004 ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகை சவுந்தர்யா பெங்களூரில் இருந்து தெலங்கானா மாநிலம் கரீம்நகருக்கு செஸ்னா-180 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உடன் இருந்தார். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம், பெங்களூரு வேளாண் பல்கலை கழகத்தின், காந்தி க்ருஷி விஷன் கேந்திரா வளாகத்தில் தீப்பிடித்து விழுந்தது. இந்த கோர விபத்தில் சவுர்யாவும், அவரது சகோதரர் அமர்நாத்தும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தனர். அந்த சமயத்தில் நடிகை சவுர்தர்யா கர்ப்பமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் நடந்து சுமார் 21 ஆண்டுகளாகிவிட்டன. இந்நிலையில், நடிகை சவுந்தர்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறை ஆணையரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் சிட்டிமல்லு கூறும்போது, “ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையம் அருகே நடிகை சவுந்தர்யாவுக்கு 6 ஏக்கர் நிலம் இருந்தது. இதனை நடிகர் மோகன்பாபு கேட்டார். ஆனால், அவருக்கு சவுந்தர்யா கொடுக்க மறுத்து விட்டார். இந்த தகராறு ஏற்பட்ட பின்னர், சவுந்தர்யா விமான விபத்தில் உயிர் துறந்தார். தற்போது அந்த இடம் நடிகர் மோகன்பாபு வசம் உள்ளது. இது எப்படி சாத்தியம் ? ஆதலால், நடிகை சவுந்தர்யாவின் மரணம் ஒரு சதித் திட்டமாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நடிகர் மோகன்பாபுவை விசாரிக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

நடிகை சவுந்தர்யா இறந்த விவகாரம், 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் எழும்பியுள்ளது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .