2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உணவு விஷமான விவகாரம்: பாதித்தோர் எண்ணிக்கை 1,005ஆக உயர்வு

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா  

அம்பாறை, இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005ஆக உயர்வடைந்துள்ளது என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரி வைபவத்தையிட்டு, கடந்த புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது, உணவு ஒவ்வாமையால் 950 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர்.  

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர், வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (8) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், அம்பாறை பொது வைத்தியசாலையிலும் இன்னுமொரு பகுதியினர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 1,005 பேரில், பலர் சிகிச்சைக்குப் பின்னர் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.   

தற்போதைய நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் 18 பேரும், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் 25 பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேருமென 105 பேர் மட்டுமே, தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, கந்தூரிக்காக சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களில் சமையற்காரர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டனர்.

அவ்விருவரும், அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

அவ்விருவரும், தங்களுடைய பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமையால், சந்தேக நபர்கள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .