2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணமும் பந்துவீச்சுத் தடையும்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்துக்குள் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். 2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சாமுவேல்ஸில் ஆரம்பித்து ஷேன் ஸிலிங்போர்ட் (மேற்கிற்திய தீவுகள்), சசித்ர சேனநாயக்க (இலங்கை), கேன் வில்லியம்ஸன் (நியூசிலாந்து), சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), சொஹைக் ஹாசி (பங்களாதேஸ்), மல்கொல்ம் வோலர் (சிம்பாவே), பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் வரை தொடர்கிறது. இவர்களில் தற்போது சேனநாயக்க மற்றும் வில்லியம்ஸன் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது புதிதில்லை என்றாலும், உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கும் பொழுது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுழற்பந்துவீச்சாளர்கள் சந்திப்பது தான் ஒவ்வொரு தேசிய அணிக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.சி.சி விதியின் படி சுழற்பந்துவீச்சாளர்கள் 15 பாகை வரையே கையை வளைக்க முடியும். அதற்கு அதிகமாக கையை வளைக்கும் பொழுதே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பந்துவீச்சாளர்கள் சந்திக்க நேரிடுகின்றது. அது மாத்திரமல்ல பந்துவீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுவதான குற்றச்சாட்டு மைதான நடுவர்களால் நாகாஸ்திரம் போன்று ஒருமுறை மாத்திரம் பிரயோகிக்கப்படுவதில்லை. எதிர்காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதனால் இதனை ஒரு சாதாரண பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவும் முடியாது.

இதனால் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள இந்தியா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் ஒருநாள் தொடரிலும் சுழற்பந்துவீச்சாளர்களை களம் இறக்குவதற்கு ஒவ்வொரு அணியும் உள்ளுர கலங்கிய வண்ணமே உள்ளன. ஏனென்றால் அத்தொடர்களில் அவர்களது பந்துவீச்சு குறித்து குற்றச்சாட்டு எழுந்தால் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர்கள் பங்குகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தி விடும். அவுஸ்ரேலிய, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதனை உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான ஒரு பயிற்சியாகக் கருதியே அத்தொடர்களில் பங்குகொள்ள குறிப்பாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் சம்மதித்தன. 

அந்தவகையில் மேற்படி தொடர்களில் சுழற்பந்துவீச்சாளர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை அதில் களமிறக்காமல் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடவிட்டால் அத்தகைய ஆடுகளங்களின் தன்மைகள் குறித்து அவர்கள் உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே தமது திறமைகளைப் பரீட்சித்துப்பார்க்க வேண்டிவரும். அதிலும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய, இலங்கை அணி வீரர்களைப் பார்த்தால் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் அம்மைதானங்களில் முதன்முறையாக விளையாடுபவர்களே. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் தெரிவுத் தாக்கம் அணியின் சமநிலையைக் குழப்புவதற்கும் வாய்ப்புள்ளது. அவுஸ்ரேலிய, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதமானவை என்பதனால் உலக்கிண்ணப் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்களின் வகிபங்கு குறைவாகவே இருக்கும் என்பது வேறுவிடயம்.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சயீட் அஜ்மல், இறுதி 15 பேர் கொண்ட அணிக்குள் வருவாரா மாட்டாரா என்பதில் சந்தேகம் நீடித்த வண்ணமே உள்ளது. எந்தவொரு அணியும் தனியொரு வீரரை நம்பியிருக்கக் கூடாது என்றாலும் உலகக் கிண்ணம் போன்ற பெருந்தொடர்களில் தனிநபரை சார்ந்திருப்பதைத் தவறென்றும் சொல்ல முடியாது. இதனால் அஜ்மலுக்குப் பதிலாக வேறு ஒரு சுழற்பந்துவீச்சாளரை அணி கைவசம் வைத்திருந்தாலும் அணியின் கட்டமைப்புகளில் அது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணவே செய்யும். ஏனென்றால் இவ்வாறான பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்ப்பதற்கான இடம் அல்ல உலகக் கிண்ணப் போட்டிகள். 

ஐ.சி.சி போன்ற உயர் அமைப்புகள் இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்குத் தடை விதிக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றில் இருந்து வீரர்கள் மீண்டெழுவதற்கு உரிய காலத்தையும் கருத்திற்கொள்வது மிக அவசியம். இன்று இலங்கை அணியின் சேனநாயக்க முதற்பரிசோதனையிலேயே வெற்றி பெற்றதனால் விளையாடுவதற்கு ஏதுவாக இலங்கை அணியில் அவரது  மீள்பிரவேசம் நிகழ்ந்துள்ளது. ஆனால் சயீட் அஜ்மல் போன்ற நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முதற்தடவை மேற்கொண்ட பந்துவீச்சு பரிசோதனை முயற்சியில் தோல்வி கண்டு இரண்டாவது தடவையாகவும் பயோ – மெக்கானிக்கல் சோதனைக்கு ஆளாகி இருப்பது பாகிஸ்தான் அணியின் உலகக் கிண்ணக் கனவை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

எனவே, ஐ.சி.சி. - முறையற்ற விதத்தில் பந்துவீசியதாய் கூறி தடைவிதிக்கப்பட்ட சுழற் பந்துவீச்சாளர்கள் இன்று நேற்றல்ல சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நாளில் இருந்தே இவ்வாறான முறையிலேயே பந்துவீசி வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மட்டும் விடுத்து அவர்கள் மீதான தடையை உலகக் கிண்ணம் போன்ற பெருந்தொடர்களின் பின்னர் விதித்திருந்தால் ஒவ்வொரு தேசிய அணியும் நிம்மதியுடன் உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்திருக்கும். அது ஒருவகையில் உலக்கிண்ணப் போட்டிகளின் தரத்தை அதிகரித்து போட்டியில் விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் மிகுவிப்பதற்கும் வாய்ப்பாக அமையும்.

அத்தோடு கிரிக்கெட் சபைகளின் பொருளாதார வளம் சார்ந்தும் இப்பிரச்சினையை ஆராய வேண்டிய தேவையுள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பயோ – மெக்கானிக்கல் நிபுணரான டோவிக் போஸ்ரரிடம் சேனநாயக்க - தெற்கு அவுஸ்ரேலியப் பல்கலைக்கழகத்தில் இந்தப் பயிற்சி பெறுவதற்காக இலங்கை மதிப்பில் சுமார் 20லட்சம் ரூபாவை இலங்கை கிரிக்கெட் சபை செலவிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய, இங்கிலாந்து, அவுஸ்ரேலிய உட்பட சில நாட்டு கிரிக்கெட் சபைகளே செல்வச் செழிப்போடு விளங்குகின்றன. ஏனைய நாட்டு கிரிக்கெட் சபைகள் வீரர்களின் சம்பள நிலுவைகளைக் கூட வழங்க முடியாத கையறு நிலையில் உள்ள போது, பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளான வீரர்களுக்கு பல லட்சங்களை வாரியிறைக்க அவர்களால் முடியாது. இந்தப் பின்னணியிலேயே அஜ்மலுக்கு பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக் பயிற்சி அளிப்பதையும் நோக்க வேண்டியுள்ளது.

எனவே, இவ்விடயத்தில் ஐ.சி.சி கிரிக்கெட் சபைகளால் செலவிடப்பட்டதொகையை மீளளிப்புச் செய்வதற்கான நடைமுறையையும் அமுல்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். ஏனென்றால் சேனநாயக்க, அஜ்மல் போன்ற வீரர்களைத் தவிர ஏனைய தடைசெய்யப்பட்ட வீரர்கள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக எந்தவொரு நடவடிக்கையும் கிரிக்கெட் சபைகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கும் பொருளாதார கையறுநிலையே முக்கிய காரணமாகத் திகழ்கின்றது.

அதுமாத்திரமல்ல அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளர்களாக இடம்பிடிக்கும் வீரர்களையும் பகுதிநேரமாக சுழற்பந்தை வீசும் வீரர்களையும் ஒரே தரத்தில் வைத்துக் கணிப்பிட முடியாத தன்மையும் கிரிக்கெட் சபைகளில் நிலவுகின்றது. சேனநாயக்கவையும் சாமுவேல்ஸையும் எடுத்துக்கொண்டால் சேனநாயக்க ஒரு முழுநேரப் சுழற்பந்துவீச்சாளர் என்பதனால் அவரது பங்களிப்பு கட்டாயம் அணிக்குத் தேவை என்ற ரீதியில் அணுகப்படுகின்றது. ஆனால், சாமுவேல்ஸ் அடிப்படையில் ஒரு துடுப்பாட்ட வீரராக விளங்குவதனால் பகுதிநேர பந்துவீச்சினை அவர் மேற்கொள்ளாவிட்டாலும் அது அணிக்குப் பாதிப்பினை ஏற்படுத்தப் போவதில்லை என்ற பார்வையிலும் உரிய பயிற்சிநெறிகளை வீரர்களுக்கு வழங்குவதில் அக்கறை செலுத்தவில்லையோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. ஆனாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சயீட் அஜ்மல், மொஹமட் ஹபீஸ் விடயத்தில் எந்தப் பேதமும் பாராமல் பயிற்சி வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்வாறான பந்துவீச்சு சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு கிரிக்கெட் சபையும் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அவர்கள் பந்துவீசுவதில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அதில் கூடிய கவனஞ்செலுத்துவதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .