-சின்னராஜா விமலன்
சர்வதேச இருபதுக்கிருபது போட்டிகளில் இருந்து குமார் சங்ககார, ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் சிரேஸ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன, ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாலும் தற்போது சங்ககாரவும் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால் இலங்கை அணியை அது பலவீனப்படுத்தி விடும் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏதுவாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வாளர்களும் அது குறித்து சங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டாலும் அது குறித்த இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
உண்மையிலே சங்கா, ஓய்வு பெற்றுச் சென்றால் இலங்கை அணி பலவீனப்பட்டு விடும் என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவுக்கு இன்னொரு உண்மையும் இதில் அடங்கி இருக்கின்றது. அது டெஸ்ட் போட்டிகளில் பிரட்மன் அடித்த இரட்டைச் சதங்களின் மொத்த எண்ணிக்கையை முறியடிப்பதற்கு சங்காவுக்கு இன்னும் 3 இரட்டைச் சதங்கள் தேவைப்படுகின்றன என்பதும் ஒருநாள் போட்டிகளில் அரைச்சதங்களில் சாதனை படைத்த டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கு இன்றைய நிலவரப்படி இன்னும் 7 அரைச் சதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுமாகும்.
ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கரின் அரைச் சதச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் சங்கா இனிவரும் ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற முடியாது. அத்தோடு தற்போதைய நிலையில் ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் பெற்ற 49 சதங்களை முறியடிக்க சங்காவால் முடியாது என்பதால் விரும்பியோ விரும்பாமலோ இனிவரும் ஒருநாள் போட்டிகளில் அவர் 99 ஆட்டமிழந்தாலும் இலங்கை ரசிகர்கள் அதிகம் கவலைப்பட மாட்டார்கள். சதத்துக்கு டெண்டுல்கர்போல் அரைசதத்துக்கு சங்கா இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.
அதுபோல, பிரட்மனின் சாதனையை முறிடிக்க அவர் எதிர்காலத்தில் விளையாடவுள்ள ஒவ்வொரு போட்டியையும் மனஅழுத்தத்துடனேயே சந்திக்க நேரிடும். அதாவது டெண்டுல்கர், சர்தேச கிரிக்கெட் போட்டிகளில் நூறாவது சதத்தைப் பெறுவதற்காக எத்தகைய மனஉளைச்சலைச் சந்தித்தாரோ அதேநிலையை சங்காவும் சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்றுள்ள சிறந்த சராசரியில் கூட அது தாக்கத்தை உண்டு பண்ணலாம். அது மாத்திரமல்ல தனிநபர் சாதனைகளை முன்னிறுத்தி ஆடுகையில் ஆட்டமிழப்புகளில் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பது கேள்விக்குள்ளாவதால் இதுவரை காலம் கிரிக்கெட் உலகில் சங்கா கட்டிக்காத்த கனவான் குணத்துக்கும் பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆட்டத்திறன் (Form) காரணமாக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடுவதும் சகஜமானதொன்றே. அந்தவகையில், எதிர்வரும் புத்தாண்டு சங்காவுக்கு எவ்வாறான ஆண்டாக இருக்கப் போகின்றது என்பதும் கணிப்பிட முடியாத ஒன்றே. அதனால் தான் புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்று விட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் ஓய்வு பெற்றுச் செல்லும் வரையில் இலங்கை ரசிகர்களிடம் இந்திய வீரர்கள் என்றாலே தனிநபர் சாதனைகளுக்காக விளையாடுபவர்கள் என்றும் இலங்கை வீரர்கள் அணியின் வெற்றியையே கருதிக் கொள்பவர்கள் என்றும் ஒரு மனோநிலை கட்டமைக்கப்பட்டிருந்தது. டெண்டுல்கர் 200 போட்டிகள் வரை விளையாடியதையும் மஹேல 150 போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றுச் செல்லாமல் 149 டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றுச்சென்றமை உட்பட சிலவற்றை சுட்டிக்காட்டுவார்கள்.
ஆனாலும் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த உலக சாதனைக்காக அந்தப் போட்டியையே சமநிலை ஆக்கியது உட்பட சில புள்ளி விபரங்கள் அவர்களின் மனோநிலைக்கு எதிராக உள்ளமை வேறு விடயம். அது குறித்துப் பேசுவதற்கு இக்கட்டுரை முனையவில்லையாதலால் அவ்விவாதத்தை இங்கே தவிர்த்து விடுகிறேன்.
உலகக் கிண்ணப் போட்டி முடிவடைவதற்குள் டெண்டுல்கரின் சாதனையை சங்கா முறியடிப்பதற்கு வாய்ப்புக்கள் இருந்தாலும் பிரட்மனின் சாதனையை முறியடிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது. ஏனென்றால் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணிக்கு நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே உள்ளன. எனவே, நான்கு இனிங்ஸ்களில் 3 இரட்டைச் சதங்களைப் பெற்றுக் கொள்வதென்பது அசாத்தியமானதொன்றாகவே காணப்படுகின்றது.
எது எப்படியோ உலகக் கிண்ணப் போட்டிகளோடு ஓய்வு பெறாமல் அதன் பின்னரும் அணியின் நன்மை கருதி என்ற போர்வையில் டெஸ்ட் போட்டிகளில் சங்கா தொடர்ந்து விளையாடுவாராயின் தனிப்பட்ட சாதனைகளுக்காக அணியில் நீடித்த ஒரு சராசரி வீரருக்கும் சங்காவுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது.